Published : 01 Jul 2014 04:35 AM
Last Updated : 01 Jul 2014 04:35 AM

விளம்பரப்படுத்தினால் மட்டும் படங்கள் ஓடாது: தியாகராஜன்

சினிமா உலகில் இருந்து சில காலமாக ஒதுங்கியிருந்த தியாகராஜன் மீண்டும் பரபரப்பாகிவிட்டார். வட இந்திய ரசிகர்கள் இந்த ஆண்டின் துவக்கத்தில் கொண் டாடி மகிழ்ந்த ’குயின்’படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கான ஆரம்பகட்ட வேலைகளில் பிஸியாக இருந்த அவரைச் சந்தித்தோம்.

‘குயின்’ படத்தை ஒரே நேரத்தில் 4 மொழிகளில் நீங்கள் ரீமேக் செய்வதற்கு என்ன காரணம்?

மூன்று மாதங்களுக்கு முன் ‘குயின்’ திரைப்படத்தை பார்த்தபோது நான் சிலிர்த்துப் போனேன். இந்தியாவில் எந்த மொழியில் எடுத்தாலும் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை நான் அப்போதே உணர்ந்தேன். அந்த அளவுக்கு எல்லோரது வாழ்க்கையையும் சம்பந்தப்படுத்தக்கூடிய உணர்வுபூர்வமான கதை இது. வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நிற்கும் ஒரு இளம் இந்தியப்பெண்ணின் கதை. இந்தப் படத்தை தென்னக ரசிகர்கள் அவரவர்களின் தாய்மொழியில் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காகவே இதை நான்கு தென்னிந்திய மொழிகளிலும் எடுக்கிறேன்.

இந்தப் படத்தை தமிழில் நீங்கள்தான் இயக்குகிறீர்களா?

இல்லை. இப்போதைக்கு எனக்கு படம் இயக்கும் எண்ணம் ஏதும் இல்லை. இப்படத்தை நான்கு மொழிகளிலும் நான்கு திறமையான இளம் இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த ‘ராணி’ கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்?

இன்னும் முடிவாகவில்லை. தெலுங்கில் முன்னணிக் கதாநாயகிகள், தங்கள் அடுத்த படத்தை ஒப்புக்கொள்ளாமல் இந்தப் படத்தின் வாய்ப்புக்காக என்னை தொடர்பு கொண்டு வருகிறார்கள். நான்கு மொழிகளுக்குமான கதாநாயகிகளைத் தேர்வு செய்தபிறகு குயினாக நடித்த கங்கனா ரனாவத், சென்னையில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட விழாவுக்கு வந்து, அவர்களுக்குக் கிரீடம் சூட்டி அறிவிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

‘குயின்’ படத்தைப் போல்தான் ‘கஹானி’ திரைப்படமும் இந்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஆனால் முன்னணி நட்சத்திரமான நயன்தாரா நடித்திருந்தும் அந்தப்படம் தமிழில் தோல்வி அடைந்துவிட்டதே?

‘கஹானி’ படத்தின் ஜீவனே நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் தன் கணவனைத் தேடி அலைவதுதான். நயன்தாராவுக்காக தமிழில் அந்தக் கதையை மாற்றினார்கள். இது மாபெரும் தவறு. கதையே ஹீரோவாக இருக்கும்போது ஹீரோவுக்காகவோ, நாயகிக்காகவோ அந்தக் கதையை மாற்றுவது தவறு. இதற்கு என்னால் நிறைய உதாரணங்களைக் கூற முடியும்.

இன்று திரைப்படங்களுக்கான வருமான எல்லை என்பது விரிந்துவிட்டது. அப்படியிருந்தும், ஆண்டுதோறும் 250 கோடி நஷ்டம் என்ற கூக்குரல் கோலிவுட்டிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறதே?

படங்களைத் தயாரிப்பதை விட அதைத் திறமையாக மார்க்கெட்டிங் செய்வது ஒரு பெரிய கலையாகிவிட்டது. பட்ஜெட்டுக்கு இணையாக விளம்பரப்படுத்தி மக்களைத் தியேட்டருக்கு இழுத்தால் மட்டும் போதாது. நீங்கள் விளம்பரப்படுத்தும் படத்தின் சரக்கு தரமானதாக இருக்க வேண்டும். ரசிகர்களை ஏமாற்ற நினைத்தால் அது விபரீதமாகிவிடும். படம் தயாரிக்க வரும் புதியவர்களுக்கு நான் சொல்வது முதலில் சினிமாவை நேசித்து, அதை முழுமையாகத் தெரிந்துகொண்டு வாருங்கள் என்பதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x