Last Updated : 11 Sep, 2017 11:52 AM

 

Published : 11 Sep 2017 11:52 AM
Last Updated : 11 Sep 2017 11:52 AM

தலித் பற்றிய கருத்துகள்: ட்விட்டர் தளத்தில் எஸ்.வி.சேகர் - பா.ரஞ்சித் கருத்து மோதல்

தலித் பற்றிய கருத்துகளால் ட்விட்டர் தளத்தில் எஸ்.வி.சேகர் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவுக்காக உரிமையேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் இயக்குநர் பா.ரஞ்சித், "தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை ஒத்துக்கொள்ள வேண்டும். இன்னும் எத்தனை நாள்தான் தமிழன் தமிழன் என்று பூச்சாண்டி காட்டப்போகிறீர்கள்? இங்கே ஊருக்கு ஊர் சேரியும் காலனியும் இருக்கிறது. நான் இன்னும் சேரியில்தான் வாழ்கிறேன். வீதிக்கு ஒரு சாதி இருக்கிறது. வீடு வாடகைக்குக் கேட்டால், வீட்டில் என்ன கறி சமைப்பீர்கள் என்று கேட்டுதான் வீடு விடுகிறார்கள். இப்படி தமிழன் சாதியால் பிரிந்து கிடக்கிறான்" என்று ஆவேசமாக பேசினார்.

இவருடைய பேச்சுக்கு சமூகவலைத்தளத்தில் ஆதரவுக் குரல் மற்றும் எதிர்ப்புக் குரல் இரண்டுமே கிளம்பியது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்" என்று பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலடியாக பா.ரஞ்சித், எஸ்.வி.சேகரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்" என்று தெரிவித்தார். பா.ரஞ்சித்தின் கருத்திற்கு பதிலாக எஸ்.வி.சேகர் "தம்பி தலித் என்று சொன்னது நீங்கள் தான். ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல்."நடைமுறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும். வெற்றி, வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார் " என்று தெரிவித்துள்ளார்.

இருவருமே நேரடியாக ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பேசிக் கொண்டதால், இருவரின் கருத்திற்கும் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தொடர்ச்சியாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x