Published : 11 Mar 2023 06:21 PM
Last Updated : 11 Mar 2023 06:21 PM
“என்னுடைய 22 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான சம்பளத்தை பெற்றிருக்கிறேன்” என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸின் புதிய வெப்சீரிஸ் ‘சிட்டாடல்’ (Citadel). ரிச்சர்ட் மேடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் தொடரில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பான் இந்தியா முறையில் இத்தொடர் வெளியாகிறது.
இந்தத் தொடர் குறித்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா முதன்முறையாக சமத்துவமான ஊதியத்தை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “நேர்காணலை யார் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து நான் சொல்ல வரும் கருத்து எனக்கே பிரச்சினையை ஏற்படுத்தலாம். சினிமா துறையில் 22 ஆண்டுகாலம் பணியாற்றி வருகிறேன். இதுவரை 70 திரைப்படங்களிலும் 2 டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன். ஆனால் ‘சிட்டாடல்’ தொடரில் நடிக்கும்போது எனது கரியரிலேயே முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான ஊதியத்தைப் பெற்றேன். இதை சொல்லும்போது எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது.
நான் இதே அளவிலான உழைப்பையும் நேரத்தையும் மற்ற படங்களுக்கு கொடுக்கிறேன். ஆனால், குறைவான ஊதியமே கிடைக்கிறது. அப்படிப் பார்க்கும்போது அமேசான் நிறுவனம் தரப்பில், ‘நீங்கள் முதன்மை கதாபாத்திரத்திற்கு இணையாக நடித்துள்ளீர்கள். அதனால் உங்களுக்கு இந்த சம்பளம் நியாயமனது’ என தெரிவித்தனர். நானும் அவர்களிடம், ‘நீங்கள் சொல்வது சரிதான். இது நியாயமான ஊதியம்தான்’ என்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT