Published : 03 Mar 2023 02:54 PM
Last Updated : 03 Mar 2023 02:54 PM

“விமர்சனங்களைப் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வரவேண்டாம்” - ரசிகர்களுக்கு மோகன் ராஜா கோரிக்கை

“விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள்தான் நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனால், அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும்” என இயக்குநர் மோகன் ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், “என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குநர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. அவர் இயக்குநராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை.

அண்மைக் காலமாக 'தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு' என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள் தான் நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். நீங்கள் வருகை தந்தால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். விமர்சனம் நன்றாக இருந்தால்தான் திரையரங்கத்திற்கு வருவோம் என்ற மனநிலையை ரசிகர்களும், பார்வையாளர்களும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

விமர்சகர்கள் மற்றும் விமர்சனங்களால் நடுத்தரமான படைப்பாக எந்த சினிமாவும் பார்க்கப்படுவதில்லை. ஒன்று சூப்பர் ஹிட் அல்லது அட்டர் பிளாப் என்ற இரட்டை நிலை மட்டுமே தற்போது இருக்கிறது. ஆவரேஜ் ஃபிலிம் என்ற ஒரு நிலை உருவாக வேண்டும். இதற்கு அனைவரும், அனைத்து திரைப்படங்களையும், திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்தால்தான் உருவாகும். தெரிந்து செல்வது சினிமா அல்ல. தெரியாமல் சென்று, இருட்டறைக்குள் நீங்கள் ரசித்து முடிவு செய்வதுதான் சினிமா. எனவே, அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x