Last Updated : 16 May, 2017 03:10 PM

 

Published : 16 May 2017 03:10 PM
Last Updated : 16 May 2017 03:10 PM

தமிழ்த் திரையுலக வேலைநிறுத்தம்: விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு

மே 30-ம் தேதி தமிழ்த் திரையுலகம் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்திற்கு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆதரவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தத்தால் பல தயாரிப்பாளர்கள், பட வெளியீட்டை மாற்றியமைத்து வந்தார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் தமிழ்த் திரையுலக வேலைநிறுத்தம் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை என்னவென்றால் வருகின்ற மே 30 முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மையல்ல.

மே 30 அன்று வழக்கம் போல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்கும். வழக்கம் போல திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன், கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவருமான திருப்பூர் சுப்புரமணியம், திருச்சி தஞ்சாவூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் பிரதாப், வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் செல்வின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வேலைநிறுத்தம் குறித்து விஷால் அறிவிக்கும் போது உடனிருந்த பன்னீர்செல்வம் தற்போது இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவில்லை என்று கையெழுத்திட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பால், வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x