இந்தியாவில் மட்டும் 2 நாட்களில் ரூ.125 கோடி - ஷாருக்கானின் ‘பதான்’ வசூல் வேட்டை
ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘பதான்’ திரைப்படம் இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.125 கோடி வசூலை குவித்துள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், படம் நேற்று முன்தினம் (ஜனவரி 25) உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. 8000 திரைகளில் வெளியிடப்பட்டது. ‘பதான்’ உலகம் முழுக்க முதல் நாள் ரூ.106 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.55 கோடியை வசூலித்திருந்தது.
இரண்டாம் நாளான நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் படம் இந்தியாவில் ரூ.70 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் ரூ.125 கோடியை வசூலித்து பாலிவுட்டிற்கு அமோக தொடக்கத்தை கொடுத்துள்ளது ‘பதான்’. அதேநேரத்தில், உலக அளவில் படம் இரண்டு நாட்களில் ரூ.230 கோடியை வசூலித்து இரண்டு நாட்களில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
