

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராஜ் ஐயப்பா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ரன் பேபி ரன்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார், வெங்கட் தயாரித்துள்ளனர். ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ள இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது:
இந்தக் கதையை கேட்டதும் பிடித்திருந்தது. ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன்வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம்தான் கதை. இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு த்ரில்லராக இருக்கும்.
இப்போதெல்லாம், படத்தின் வசூல் பற்றி இளைஞர்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். ‘அமெரிக்காவில் எவ்வளவு வசூல், ஐரோப்பாவில் இவ்வளவு வசூல்’ என்று அவர்களின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. கோடிகள் செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இதுபற்றி கவலைப்பட்டுக் கொள்வார்கள். இளம்தலைமுறையினர் கவலைப்படுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை.
எதிர்காலத்தில் அதிகமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். வேலை இழப்புகள் வெளிநாடுகளில் அதிகரித்து வருகின்றன. அதனால் இளைஞர்களின் ஆற்றல் முக்கியம். அந்தச் சக்தியை,திரைப்படங்களின் வசூல் உள்ளிட்டவற்றுக்காக இழக்க வேண்டாம். சமீபத்தில் ஒரு பட ரிலீஸின்போது ஓர் உயிர்போயிருக்கிறது. அதனால் வசூல் கவலைரசிகர்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.