Published : 19 Jan 2023 01:28 PM
Last Updated : 19 Jan 2023 01:28 PM

“நன்றாகத்தான் இருந்தார்; திடீரென இப்படியாகிவிட்டது” - தாய் குறித்து வடிவேலு உருக்கம் 

“அம்மா நன்றாகத்தான் இருந்தார். திடீரென இப்படி நிகழ்ந்துவிட்டது” என நடிகர் வடிவேலு உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக உள்ள வடிவேலுவின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் சரோஜினி (87) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.19) இரவு சிகிச்சை பலனின்றி மதுரை விரகனூரில் மரணம் அடைந்தார். இவரது மரணம் வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “முதலமைச்சர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தைரியம் சொன்னார். ‘அம்மா எப்படி இறந்தார்கள்?’ எனக்கேட்டார். உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறினேன். அம்மா நன்றாக இருந்தார். பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்தேன். திடீரென்று இப்படியாகவிட்டது. அன்பில் மகேஷ், பூச்சி முருகன் உள்ளிட்ட பலரும் தொடர்பு கொண்டு பேசினார்கள். அம்மா பெயர் சரோஜி என்கிற பாப்பா. அம்மாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும்” என தெரிவித்தார்.

வடிவேலுவின் தாயார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க. அழகிரி நேரில் சென்று துக்கம் அனுசரித்துள்ளார். திரையுரலகைச் சேர்ந்த பலரும் வடிவேலு தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x