

‘வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு வரும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சினிமா மற்றும் நீர்ப்பாசனத்துறை இணைஆணையர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 13, 14, 15 மற்றும் 16 ம் தேதிகளில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ படங்களை அதிகாலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்புக் காட்சிகளாக வெளியிட தடை விதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த உத்தரவு பொருந்தும்.
திரையரங்கு நுழைவு வாயில்களில் உயரமான பேனர், கட்அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது. டிக்கெட்டுகளின் பின்புறம், திரையரங்குகளில் ஏதேனும் பிரச்சினை தொடர்பான புகாருக்கான உயரதிகாரியின் பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரியை அச்சிட வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.