

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்துடன் கைகோர்த்திருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் இந்தப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து சிறப்புத் தோற்றத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன்லால் புகைப்படத்தை பதிவிட்டு, ‘ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திலிருந்து மோகன்லால்’ என பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால் என ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.