Last Updated : 03 Jul, 2014 08:00 AM

 

Published : 03 Jul 2014 08:00 AM
Last Updated : 03 Jul 2014 08:00 AM

மவுலிவாக்கம் பலி 49 ஆக அதிகரிப்பு: இடிபாடுகளில் இன்னும் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

போரூர் அருகே இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து இதுவரை 49 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் 72 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை சடலமா கவும் உயிருடனும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் மாலை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை 33 பேர் சடலமாகவும் 27 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

மேலும் 16 உடல்கள் மீட்பு

இதையடுத்து, நள்ளிரவில் நடந்த மீட்புப் பணியில் மேலும் 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 5-வது நாளாக புதன்கிழமையும் மீட்புப் பணி தொடர்ந்தது. காலை 7.30 மணிக்கு ஒரு உடல் மீட்கப்பட்டது. அதன்பின் பகல் 1.50 மணி வரை ஒரு பெண் உள்பட மேலும் 8 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் அடுத்தடுத்து மீட்டனர். மீட்கப்பட்ட 16 உடல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இடிந்து விழுந்த கட்டிடத்தில் மொத்தம் 72 தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 49 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் என மொத்தம் 76 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி இன்னும் முடிவடையாததால் மேலும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என தெரியாமல் மீட்புக் குழுவினரும், அரசு அதிகாரிகளும் குழப்பமடைந்துள்ளனர்.

கை மட்டும் சிக்கியது

புதன்கிழமை காலை 11.30 மணியளவில் 45-வது சடலம் மீட்கப்பட்டது. ஏற்கெனவே 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியிருந்த 72 பேரும் மீட்கப்பட்டு விட்டனர் என நினைத்து மீட்புக் குழுவினர் பணிகளை வேகப்படுத்தினர். கூடுதலாக 2 பொக்லைன் இயந்திரத்தை இடிபாடுகளுக்குள் இறக்கி பணிகளை வேகப்படுத்தினர். அப்போது, இயந்திரத்தின் கைப்பிடியில் ஒரு கை மட்டும் தனியாக சிக்கி வெளியே வந்தது. இதைப் பார்த்த மீட்புக் குழுவினர் உடனடியாக பணிகளை நிறுத்தினர். பொக்லைனில் சிக்கிய கையை 108 ஆம்புலன்ஸில் வைத்தனர்.

மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதி தேடினர். அப்போது ஒரு பெண் உள்பட மேலும் 4 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்தது.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிலாளர்கள் சிலர் குடும்பத்துடன் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. குழந்தைகளும் உடன் இருந்ததாக கூறுகின்றனர். சனிக்கிழமை வேலைக்கு வராதவர்களும் மாலையில் சம்பளம் வாங்குவதற்காக வந்துள்ளனர். மழை பெய்ததால், அனைவரும் கட்டிடத்துக்குள் சென்று நின்றுள்ளனர். அதனால், கட்டிட இடிபாடுகளில் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அண்ணனை காணவில்லை, தம்பியைக் காணவில்லை, கணவரை காணவில்லை என பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதனால், இன்னும் 30-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x