Last Updated : 19 Nov, 2022 03:04 PM

Published : 19 Nov 2022 03:04 PM
Last Updated : 19 Nov 2022 03:04 PM

யூகி Review: திகட்டும் திருப்பங்களுடன் த்ரில் அனுபவம் தரும் முயற்சி

தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக யூகிக்க முடியாத பாதையைத் தேர்ந்தெடுத்து தன்னளவில் நீதி பெறும் ஒருவனின் கதைதான் ‘யூகி’. காணாமல் போன கார்த்திகா (கயல் ஆனந்தி) என்ற பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அசைமென்ட் டிடெக்டிவ் நந்தாவிடம் (நரேன்) கொடுக்கப்படுகிறது. மறுபுறம் அதே பெண்ணை அரசியல்வாதி தரப்பும் தீவிரமாக தேடிக்கொண்டிக்கிறது. இரு தரப்பில் யார் முதலில் அந்தப்பெண்ணை கண்டுபிடிக்கிறார்கள்? அதற்கெல்லாம் முன்பு யார் அவர்? அவரை ஏன் கண்டுபிடிக்க வேண்டும்? என்ன செய்தார்? - இப்படி பல விடை தெரியாத கேள்விகளுக்கு யூகிக்க முடியாத வகையில் திரைக்கதையாக்கியிருக்கும் படம்தான் ‘யூகி’.

ஜாக் ஹாரீஸ் திரைக்கதை எழுதி இயக்க பாக்யராஜ் ராமலிங்கம் படத்தின் கதை மற்றும் வசனத்தை எழுதியிருக்கிறார். நான்-லீனியர் முறையில் ஒரு கதையை முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக காட்சிப்படுத்த இருவரும் முயற்சித்துள்ளனர். திரைக்கதையில் அவர்களின் மெனக்கெடல் திரையில் நன்றாக தெரிந்தது. பல லூப்ஹோல்களை முடிந்த அளவுக்கு அடைக்க முயற்சித்து ஒரு சுவாஸ்யமான த்ரில்லர் படமாக ‘யூகி’ யை கொண்டுவர மெனக்கெட்டபோதிலும், படத்தின் முதல் பாதி பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. காரணம், நிறைய விடைதெரியாத கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்று, இடையிடையே காதல், பாடல்களை சொருகியிருப்பது அயற்சி.

முதல் பாதியில் சில காட்சிகள் சுவாரஸ்யமாக படமாக்கியிருந்தபோதும், பல காட்சிகள் தேடுதல் தேடுதல் என நீ......ண்டுகொண்டே செல்வதால் அது ஒரு கட்டத்தில் காட்சிகளுக்கும் நமக்குமான இடைவெளி அதிகரித்து விடுகிறது. இடைவேளை வரை படத்தின் நகர்வை கணிக்க முடியாத நிலையில், இரண்டாம் பாதியில்தான் படம் தொடங்குகிறது. குறிப்பாக, ட்விஸ்ட் வெளிப்படும் காட்சிகள் சீட் நுனிக்கு தள்ளுகின்றன. அதற்கான காரணத்தை அறியும் ஆவலும் மேலிட, விறுவிறுப்பான த்ரில்லருக்கான தீனியை திரைக்கதை தூவுகிறது.

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பின் கதிர் - ஆனந்தி கூட்டணி. ஆனந்தி சிறிது நேரமே வந்தாலும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில இடங்களில் மிகை நடிப்பு தென்பட்டாலும் அது பெரிதாக துருத்தவில்லை. படத்தின் முதல் பாதியை நரேனும், இரண்டாம் பாதியை கதிரும் பிரித்துகொள்கின்றனர். டிடெக்டிவாக நரேன் சோகத்தை சுமந்த முகம், சந்தேகத்துடனே அனைத்தையும் பார்க்கும் பார்வை, எப்போதும் ஏதோ ஒன்றை சிந்தித்துக்கொண்டிருப்பது போன்ற தோற்றத்துடன் மர்மமாக கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். இதுவரை நடித்திலேயே புதுமையான கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார் கதிர். நட்டி நட்ராஜ் வழக்கமான தனது நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். நடிகை வினோதினி கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

திரைக்கதையின் ஓட்டத்திற்கேற்ப ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மர்மமான முறையில் எழுதப்பட்ட விதம் பலம் என்றபோதிலும், ஆனந்திக்கான காட்சிகளில் எமோஷன் காட்சிகள் கட்டமைக்கப்பட்டவிதம் அதனளவில் பலவீனத்தை உணர்த்துகிறது. குறிப்பாக, ஆனந்தியைச் சுற்றி மொத்தக் கதையும் நடக்கிறது என்றபோது, அதற்கான எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களை பாதிக்காத வகையில் இருந்ததும், சுவாரஸ்யத்துக்காக பல காட்சிகள் திணிக்கப்பட்டிருந்ததும் பலவீனம்.

சில இடங்களில் பார்வையாளர்களை ஏமாற்ற முயற்சித்து குழப்பியிருப்பதும், அதீத கதாபாத்திரங்களின் சேர்க்கையும், படம் முடிந்து வெளியே வரும்போது எந்த கதாபாத்திரங்களும் மனதில் தேங்காததும் படத்தின் நிறைவிலிருந்து விலக்குகிறது.

ரஞ்சின் ராஜ் பிண்ணனி இசை சில இடங்களில் காட்சிகளுடன் பொருந்தியிருக்கிறது. புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவில் சில காட்சிகள் யூகிக்க முடியாத ஃப்ரேம்களில் கவனம் பெறுகின்றன.

மொத்தத்தில் அதீத திருப்பங்களை நிறைத்து, கேள்விகளை அடுக்கி, திரைக்கதை மூலமாக பார்வையாளர்களை சுவாரஸ்யப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்கள். பால்கோவாவாக இருந்தபோதிலும் ருசியில்லாத இனிப்பு ஒரு கட்டத்தில் திகட்டி விடுவது போல படம் திருப்பங்களால் தெகட்டியிருக்கிறது. மேலும் ‘யூகி’ என தலைப்பு வைத்ததால் பார்வையாளர்களையும் யூகி யூகி என பாடாய் படுத்துவது நியாயமாரே?

தவறவிடாதீர்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x