

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் குத்துப்பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை அடா சர்மா. ‘சார்லி சாப்ளின் 2’ படத்திலும் நடித்திருந்தார். இவர் இப்போது, ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கியுள்ளார். இதன் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா, ‘என் பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன். செவிலியராக சேவை செய்ய விரும்பினேன். இப்போது பாத்திமாவாக மதமாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் சிறையில், ஐஎஸ் தீவிரவாதியாக இருக்கிறேன். என்னுடன் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா மற்றும் ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில், சாதாரணப் பெண்களை தீவிரவாதிகளாக மாற்றும் இந்தக் கொடிய விளையாட்டை தடுக்க யாருமில்லையா? இது என் கதை. 32 ஆயிரம் பெண்களின் கதை’ என்று அவர் கூறுகிறார். இதில் பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்துள்ளதாகவும் கேரளாவை தவறாகச் சித்தரிப்பதாகவும் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழுவில், பத்திரிகையாளர் பி.ஆர்.அரவிந்தாக்ஷன் என்பவர் புகார் செய்துள்ளார்.