Last Updated : 01 Jul, 2014 09:00 AM

 

Published : 01 Jul 2014 09:00 AM
Last Updated : 01 Jul 2014 09:00 AM

வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர்

விளாதிமிர் நபகோவ், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர். லோலிதா, பேல் ஃபயர் போன்ற பிரபல நாவல்களை எழுதியவர். உலகம் அதிகம் அறியாத இன்னொரு பரிணாமமும் நபகோவுக்கு உண்டு. அவர் ஒரு பூச்சியியல் வல்லுநர். உலகெங்கும் பயணம் செய்து வண்ணத்துப்பூச்சிகளின் பல்வேறு வகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒப்பாய்வு உயிரியல் அருங்காட்சியகத்தில் செதில் இறக்கை இனப் பிரிவின் காப்பாளராக இருந்தபோது,வண்ணத்துப்பூச்சி வகையினங்களைப் பற்றி விரிவான குறிப்புகளை நபகோவ் வெளியிட்டார். பாலிமேட்டஸ் புளூஸ் என்னும் நீல வண்ணத்துப்பூச்சி வகை பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சர்ச்சைக்குரிய ஒரு முடிவை வெளியிட்டார். அந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆதியில் ஆசியாவைத் தாய்வீடாகக் கொண்டவை. ஆசியாவிலிருந்து காற்றலைகளின் வழியாக நகர்ந்து படிப்படியாகப் பரிணாமம் பெற்று லட்சக்கணக்கான ஆண்டுகளின் காலவெளியில் தென்அமெரிக்கக் கண்டத்துக்கு வந்தவை என்பதே அவரது முடிவு. இந்தக் கணிப்பை அவர் வெளியிட்ட ஆண்டு 1945.

அவரது காலத்தில் இருந்த தொழில்முறை செதில் இறக்கை பூச்சியியல் வல்லுநர்கள் நபகோவின் இந்த முடிவுக்கு முக்கியத்துவம் தரவில்லை. ஆனால், அவரது இறப்புக்குப் பின்னர், அவருடைய விஞ்ஞான ஆய்வு முடிவுகளுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. கடந்த பத்தாண்டுகளில் பாலிமேட்டஸ் புளூஸ் வண்ணத்துப்பூச்சிகளின் பரிணாம வளர்ச்சி குறித்து ஒரு விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்ததில், நபகோவின் ஆய்வு முடிவு முற்றிலும் சரி என்று தெரியவந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான ஹார்வர்டைச் சேர்ந்த நவோமி பியர்ஸ் நபகோவின் கண்டுபிடிப்பை ஓர் அற்புதம் என்று வியக்கிறார்.

சிறு வயது ஆர்வம்

நபகோவுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியவர்கள் அவரது பெற்றோர். அவரது தந்தை விளாதிமிர் டிமிட்ரிவிச் நபகோவ் அவரது அரசியல் செயல்பாடுகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டபோது, எட்டு வயதுச் சிறுவன் விளாதிமிர் தன் தந்தைக்கு ஒரு வண்ணத்துப் பூச்சியைத்தான் பரிசாகக் கொண்டு சென்றான். வளரிளம் பருவத்தில் வண்ணத்துப்பூச்சி வேட்டையைத் தொடங்கிய நபகோவ், தான் பிடித்த வண்ணத்துப்பூச்சி வகையின் பண்புகள் மற்றும் உடலியல் விவரங்களை எழுதிவைத்து, தான் படித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயன்றார். ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதால் அவரது குடும்பம் ஐரோப்பாவுக்குக் குடிபுக நேர்ந்தது.

ஐரோப்பாவில் நபகோவ் பல அருங்காட்சியகங்களுக்குச் சென்று அங்குள்ள வண்ணத்துப் பூச்சிகளின் தொகுப்பைப் பார்த்தார். அவர் எழுதிய இரண்டாவது நாவலான ‘கிங், குயின், நேவ்’-லிருந்து கிடைத்த பணத்தில் அவரும் அவருடைய மனைவி வெராவும் பயணம் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகளைச் சேகரித்தார்கள். 1940-ல் நாஜிகளின் எழுச்சியால் மீண்டும் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு நபகோவ் குடிபுக நேர்ந்தது. அமெரிக்காவில்தான் நாவலா சிரியராக நபகோவுக்குப் பெரும் புகழ் கிடைத்தது. இங்குதான் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியில் அவர் ஆழக்கால் பதித்தார்.

காலம் கடந்த மரியாதை

1958-ம் ஆண்டு ‘லோலிதா’ நாவல் வழியாகப் பெரும் இலக்கிய நட்சத்திரமாக அமெரிக்காவில் நபகோவ் உருவெடுத்தார். ஆனாலும் ஹார்வர்டு அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக, கடமை மிக்க விஞ்ஞானியாக அவரை அவரது சகாக்கள் கருதினாலும், அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பெரிய முக்கியத்துவம் கிடைக்கவேயில்லை.

நபகோவின் மரணத்துக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1990-களில் டாக்டர் நவோமி பியர்ஸ் என்ற பூச்சியியல் ஆய்வாளர் நபகோவ் ஆராய்ச்சி செய்த அதே நீல வண்ணத்துப்பூச்சி வகை குறித்து, அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆராயத் தொடங்கியிருந்தார். அந்த வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புகளை ஆராய்ந்தபோது, அவற்றின் பன்மயம் அவரை ஆச்சரியப் படுத்தியது. அதுதொடர்பான முந்தைய ஆய்வுகளைப் பார்த்தபோதுதான், நபகோவின் கட்டுரைகளை அவர் படிக்க நேர்ந்தது. பாலிமேட்டஸ் புளூஸ் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து நபகோவ் எழுதியிருந்த வகைப்பாடு முற்றிலும் சரியென்ற முடிவுக்கு வந்தனர் விஞ்ஞானி கள். நபகோவின் நினைவாகப் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சி இனங்களில் சிலவற்றுக்கு அவரது பெயரை வைத்தனர். அவற்றில் ஒன்று நபகோவியா கஸ்குன்ஹா (Nabokovia cuzquenha).

கண்டுபிடிப்பு நிரூபணம்

சமீபத்தில்தான் நபகோவின் ஆராய்ச்சி முடிவுகளை, டி.என்.ஏ. வகைப்பாட்டு தொழில்நுட்பங்களின் கீழ் விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர். உதாரணத்துக்கு 1944-ல் கார்னர் புளூ என்ற வண்ணத்துப்பூச்சி வகை குறித்து நபகோவ் ஆராய்ந்தபோது அதன் வண்ணம், அவை சாப்பிட விரும்பும் தாவரங்கள் ஆகியவற்றைக் கொண்டு அது தனித்துவமான சிறப்பினம் என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனால், அவரது சக விஞ்ஞானிகள் அவற்றின் மரபணுக்களை அந்தக் காலகட்டத்தில் ஆராய்ந்து மெலிசா புளூ வகையின் ஒரு துணை வகை அது என்றே முடிவுசெய்திருந்தனர்.ஆனால், சமீபத்தில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி கிரிஸ் நைஸ் மற்றும் அவரது சகாக்கள் ஆராய்ந்தபோது, கார்னர் புளூஸ் மற்றும் மெலிசா புளூஸ் இரண்டு வகைகளுக்கும் சில மரபணுக்கள் மட்டுமே பொதுவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்துக் கார்னர் புளூஸ் வண்ணத்துப்பூச்சிகள் தனிச் சிறப்பினம் என்ற முடிவுக்கு வந்ததோடு, அதை முதலில் கண்டறிந்தது நபகோவ்தான் என்றும் அங்கீகரித்துள்ளனர்.

இயற்கையின் ரகசியங்கள்

நபகோவ் அவர் காலத்தில் வண்ணத்துப்பூச்சி வகைகள் குறித்த தனது ஆராய்ச்சிக்கு மரபணு ஆராய்ச்சியைப் பெரிதாகச் சார்ந்திருக்கவில்லை. நீல வண்ண வண்ணத்துப்பூச்சி வகைகளின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வதற்கு, இப்போதிருப்பதைப் போல உயர் தொழில்நுட்ப மரபணு ஆராய்ச்சிகளும் அப்போது இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், குறிப்பாக ஆண் வண்ணத்துப்பூச்சிகளின் பாலுறுப்பை நுண்ணோக்கி வழியாக ஆராய்ந்ததன் வாயிலாகவே நபகோவ் பல முடிவுகளுக்கு வந்தார்.

ஒரு வண்ணத்துப்பூச்சி வகைப்பாட்டியலாளராக வண்ணத்துப்பூச்சி இறகுகளின் வண்ணங்கள் மற்றும் ஆச்சரியப்படத்தக்க வெளிப்புற வடிவங்களை மட்டும் விரும்பியவர் அல்ல நபகோவ். அந்தச் சின்னஞ்சிறு உயிர்களின் வடிவமும் செயல்பாடுகளும் அவற்றுக்கும் இயற்கைக்கும் இடையிலான நுட்பமான உறவுகளும் அவரை ஈர்த்துள்ளன. அந்த ஈர்ப்புதான் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகளின் பின்னே கண்டம் கண்டமாக அவரை அலைய வைத்தது. வண்ணத்துப் பூச்சிகளின் உடல் பாகங்களை விதவிதமாக அவர் வரைந்திருக்கிறார். அழகிய ஓவியங்களாக வண்ணத்துப்பூச்சிகளை வரைந்து நண்பர்களுக்குப் பரிசளிப்பதில், அவருக்கு அலாதியான விருப்பம் இருந்துள்ளது.

வண்ணத்துப்பூச்சியின் உடலமைப்பிலும் வடிவத்திலும் இயற்கை பல ரகசியங்களைப் புதைத்து வைத்திருப்பதாக அவர் நம்பினார். அதைக் கண்டும் அறிந்தார். ஆனால், அவரது காலத்தில் அவரது கண்டுபிடிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x