Published : 01 Nov 2022 04:40 PM
Last Updated : 01 Nov 2022 04:40 PM

பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கவுரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார்.

கர்நாடக இசையின் பிரதான பாடகராகவும், இசையமைப்பாளராகவும் கோலோச்சுபவர் அருணா சாய்ராம். இவர், இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாடெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் "உயர் சிறப்பு விருதை" பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரான்ஸ் குடியரசின் கலாசார அமைச்சர் ரீமா அப்துல் மலாக், "இந்த விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு உங்களின் ஏராளமான பங்களிப்புகளுக்கு எங்கள் நாட்டின் பாராட்டுக்கான அடையாளமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

"கர்நாடக இசையின் அற்புதமான அழகையும் நுணுக்கத்தையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் பரப்பியுள்ளீர்கள். இந்த விருது பிரான்ஸ் நாட்டின் மீது நீங்கள் எப்போதும் கொண்டுள்ள நட்பை குறிக்கிறது. உங்கள் செயல்பாடு மற்றும் உங்கள் படைப்புகள் மூலம் கர்நாடக இசை உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். பிரெஞ்சு கலைஞர்களுடனான உங்களின் பல கூட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிரான்சில் அடிக்கடி நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம், பிரான்ஸ் மற்றும் இந்தியாவை நெருக்கமாக கொண்டு வரவும், இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் கலை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நீங்கள் பெரிதும் பங்களித்துள்ளீர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அருணா சாய்ராம் கூறுகையில், "ஒரு இசைக் கலைஞராகவும், நமது நாட்டின் கலாச்சார வாரிசாகவும் எனது கடமையை செய்ததற்காக இதுபோன்ற ஒரு உயரிய விருதை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், நான் செய்து வரும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இது வழங்குகிறது. பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்," என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x