

பாஜக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தயார் என தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். மக்கள் விரும்பினால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்லியுள்ளார்.
இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடிப்பது வழக்கம். தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமயங்களில் இவரது கருத்துகள் அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை எழுப்பும்.
“தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுத்தால் அதற்கு நான் தயார். ஏனெனில் அனைத்து வகையான பங்கேற்பையும் விரும்புபவள் நான். கடினமாக உழைக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். இமாச்சல பிரதேச மக்கள் விரும்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
ஆம் ஆத்மி கட்சியின் போலி வாக்குறுதிகளுக்கு இமாச்சல பிரதேச மக்கள் ஏமாற மாட்டார்கள். இலவசங்கள் குறித்த அறிவிப்புகளும் இங்கு கவனம் பெறாது” என அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 2023 ஜனவரி 8 வாக்கில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது.