Last Updated : 29 Nov, 2016 12:11 PM

 

Published : 29 Nov 2016 12:11 PM
Last Updated : 29 Nov 2016 12:11 PM

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: கரு.பழனியப்பன் கோரிக்கை

திரையுலகை ஒன்று திரட்டி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குநர் பாணி இயக்கத்தில் தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ராணி'. இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினரோடு இயக்குநர் சமுத்திரகனி, கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபாகரன், பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசியது, "நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும். இப்போது முதன் முறையாக இளையராஜா அவர்களிடம் கோரிக்கை வைக்கப் போகிறேன். அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரை கேட்கிறோம். அப்படி இருக்கும் போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும் போது அதை பல ஆண்டுகள் தாண்டி அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி.

எனக்கு கார்த்திக் ராஜாவிடமும், யுவன் ஷங்கர் ராஜாவிடம் ஒரு கோரிக்கை உண்டு. இளையராஜா அவர்கள் இதுவரை இசையமைத்த படங்களின் பட்டியலை உருவாக்க வேண்டும். மற்றொன்று ஒட்டு மொத்த திரையுலகையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான். 40 வருடங்களாக சாதனை புரிந்து வரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் இயக்குநர் பேரரசு பேசியது, "நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமைப்பட்டுள்ளேன். ஒன்று என்னுடைய முன்னாள் காதலியின் கணவன் மற்றொன்று இளையராஜா இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள். அந்த விதத்தில் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு. நான் இளையராஜாவை கவரும் வகையில் கதையை தயார் செய்து நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன். நாம் எல்லோரும் பயணத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இளையராஜாவின் பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டால் 2,000 கிலோ மீட்டர் தாண்டி கூட பயணிக்கலாம்.

இயக்குநர் பாணியின் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படத்தில் எனக்கு அனைத்து பாடல்களும் மனதை கவரும் வகையில் உள்ளது. இப்படிபட்ட சிறந்த பாடல்களை இளையராஜாவால் மட்டுமே உருவாக்க முடியும். எனக்கு இளையராஜாவிடம் ஒரு கோரிக்கை அவர் இதை போல பாடல்களை தான் உருவாக்க வேண்டும். கரு. பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான். ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இளையராஜாவை மிஞ்ச முடியாது என்பது தான் உண்மை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x