

'வாரிசு' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்துடன் படம் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது.
போஸ்டரில் கருப்பு சட்டையுடன் கையில் சுத்தியை வைத்துக்கொண்டு மாஸ் லுக்கில் நடிகர் விஜய் இருப்பது போல அந்த போஸ்டர் அமைந்துள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து வாரிசு அப்டேட் வரும் என தயாரிப்பு நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.