

ஜெயம் ரவிக்கு கரோனா தொற்று: நடிகர் ஜெயம் ரவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்கு கரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசன் ‘தி ஐ' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது. எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கும் இந்தப் படத்தை ஃபிங்கர்பிரின்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
உளவியல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம் இது. இதில் 'தி லாஸ்ட் கிங்டம்', 'ஒன் டே' படங்களில் நடித்த மார்க் ரௌலி, 'ட்ரூ ஹாரர்' அன்னா சவ்வா, 'தி டச்சஸ்' லிண்டா மார்லோ உள்பட பலர் நடிக்கின்றனர். ஸ்ருதிஹாசன் கூறும்போது, “'தி ஐ' போன்ற அற்புதமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. திறமையான பெண்களால் வழி நடத்தப்படும் அணி என்பது இதன் கூடுதல் சிறப்பு'' என்று தெரிவித்துள்ளார்.
கோவா பட விழாவில் திரையிட 3 தமிழ்ப் படங்கள் தேர்வு: இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் ஒவ்வொரு வருடமும் நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான விழா நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. இங்கு 25 திரைப்படங்களும், 20 ஆவணப் படங்களும் திரையிடப்படுகின்றன.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’, கமலக்கண்ணன் இயக்கிய ‘குரங்கு பெடல்’, ரா.வெங்கட் இயக்கிய ‘கிடா’ ஆகிய தமிழ்ப்படங்கள் இங்கு திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆவணப்படங்களில், ‘லிட்டில் விங்க்ஸ்’ என்ற தமிழ்ப்படம் உள்பட 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.