Published : 17 Oct 2022 12:13 PM
Last Updated : 17 Oct 2022 12:13 PM

சர்ச்சையை மீறி சாதித்த ‘பொன்னியின் செல்வன்’ - மீண்டும் உயிர் பெறும் சரித்திரப் படங்கள்

பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து சரித்திரப் படங்களை உருவாக்க இயக்குநர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்கி எழுதிய புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கடந்த மாதம் 30 ம் தேதிவெளியாகி வசூல் சாதனைப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரைரூ.450 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. படம் வெளியானபோது, ராஜராஜசோழன் இந்துமதத்தைச் சேர்ந்தவன் இல்லை என்றும் அந்தக் காலகட்டத்தில் இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இந்து மத எதிர்பார்ப்பாளர்கள், படத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்தனர். அந்த விமர்சனங்களை மீறி இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடி வருகிறது.

இதனால், இப்போது பல இயக்குநர்கள் சரித்திரக் கதைகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன், இயக்குநர் சுசி கணேசன், இந்தியாவின் முதல், பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் வரலாற்றை வெப் தொடராக இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42 வது படம் சரித்திரக் கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது.

இயக்குநர் செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்தப் படமும் சோழர்களைப் பற்றியதுதான். சிம்புதேவன், தனுஷ் நடிப்பில் ‘மாரீசன்’ என்ற படத்தை இயக்கப் போவதாக சில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. இயக்குநர் சுந்தர்.சி, ‘சங்கமித்ரா’ என்ற சரித்திரப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ படத்தை ஆரம்பித்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில் கைவிட்டார். கே.எஸ்.ரவிகுமார்,ரஜினிகாந்த் நடிப்பில் ‘ராணா’ என்ற வரலாற்றுக் கதையைக் இயக்க இருந்தார். அப்போது, ரஜினிகாந்துக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், அந்தப் படம் நின்று போனது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியின் மூலம், இந்தப் படங்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இதுபற்றி தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, “அதிக பட்ஜெட்டில் சரித்திரப் படங்களைத் தயாரிப்பது ரிஸ்க் என்றே நினைத்திருந்தனர். ‘பொன்னியின் செல்வன்’ வெற்றி அந்த எண்ணத்தை மாற்றிஇருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் வரலாற்றைப் படமாக்க, தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற படங்கள் அதிகம் உருவாக வாய்ப்புஇருப்பது உண்மைதான்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x