

''லைகர் தோல்விக்காக என்னால் அழுதுகொண்டிருக்க முடியாது; கடந்து செல்ல வேண்டும்'' என்று அப்படத்தின் இயக்குநர் பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவான 'லைகர்' திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்தித்தது. எதிர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், படம் குறித்தும், தோல்வி குறித்தும் உருக்கமாக பேசியுள்ள படத்தின் இயக்குநர் பூரி ஜெகந்நாத், ''வெற்றி தரும் ஏகப்பட்ட உற்சாகத்தை தோல்வி மழுங்கடிச் செய்து விடுகிறது. வெற்றியின்போது நாம் மேதையாக உணர்வோம்; அதே சமயம் தோல்வி நம்மை ஒரு முட்டாளைப்போல உணர வைத்துவிடும்.
படங்கள் வெற்றிபெறும்போது நம்மை நம்பியவர்கள், படங்கள் தோல்வியடையும் போது அப்படியே எதிர்மறையாக நமக்கு எதிராக திரும்பிவிடுவார்கள். நமக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள் இருக்கும். அதையெல்லாம் எதிர்கொள்ள போதிய வலிமை வேண்டும். நாம் காயமடைந்தால், அதிலிருந்து குணமடைந்து விடுபட காலம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த மீளும் காலம் மிக குறைவாக இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். நாம் ஒருவரை இழக்க நேரிடலாம், செல்வம் நம்மைவிட்டு போகலாம் எதுவானாலும் சரி அதிலிருந்து மீள்வதற்கான காலம் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. நாம் அடுத்தடுத்த விஷயங்களுக்கு கடந்து செல்ல வேண்டும்.
"நான் மூன்று வருடங்கள் லைகர் படத்தில் வேலை செய்தேன். அந்த படத்திற்காக நடிகர்களுடன் இணைந்து அழகான செட்களை உருவாக்கி, மைக் டைசனுடன் படமாக்கினேன். ஆனால், அது தோல்வியடைந்தது.அதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாம் அழ முடியாது. அதை திரும்பிப் பார்த்தால், நான் சோகமாக இருந்த நாட்களை விட நான் மகிழ்ச்சியாக இருந்த நாட்களே அதிகம். உங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை உருவாக்குவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் மகிழ்வீர்கள். சிறந்த சினிமா உருவாகும்'' என்றார்.