

நடிகர் கார்த்தி 'காந்தாரா' படத்தின் இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெரிய திரையில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள கன்னட திரைப்படம் 'காந்தாரா' (Kantara). பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.
நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதை உடன் படத்துக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இதை உணர்ந்த படக்குழு படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக அறிவித்திருந்தது. அந்த வகையில் படம் இன்று (அக்டோபர் 15) திரையரங்குகளில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தைப்பார்த்த நடிகர் கார்த்தி, 'காந்தாரா' படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த சந்திப்பின் போது நடிகர் கார்த்தி, ''வாழ்த்துகள்.. படம் ஃபென்டாஸ்டிக். என்னுடைய மைத்துனன் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, 'இந்தப்படத்த பாருங்க. பாத்ததும் நான் அழுத்துட்டேன்' எனக் கூறினார். படம் சிறப்பாக உள்ளது'' எனப் பாராட்டினார். அப்போது பேசிய படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, ''சமூகத்தில் ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதி என்ற பாகுபாடு இல்லாத ஒரு நிலையை கொண்டு வர வேண்டும் என்பது தான் நோக்கம்'' என்றார்.