Published : 13 Oct 2022 07:19 PM
Last Updated : 13 Oct 2022 07:19 PM

‘ஆச்சார்யா’ பட தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம்: சிரஞ்சீவி

''ஆச்சார்யா படம் நஷ்டமானதை அடுத்து நானும், ராம்சரணும் 80% பணத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துவிட்டோம். படம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்'' என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம சரண் இணைந்து நடித்த படம் 'ஆச்சார்யா' . தந்தை, மகன் இருவரும் இணைந்து நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கொரடாலா சிவா இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இதற்கு முன் மகேஷ் பாபுவை வைத்து 'பரத் அனே நேனு', ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து 'ஜனதா கறகே' போன்ற படங்களை இயக்கியவர். ராம்சரண் தயாரிப்பில் வெளியான இப்படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியானது. ஆனால், வெளியான முதல் நாளே எதிர்மறை விமர்சனங்களை பெற்றதால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் குறைந்தது.

இந்தப் படத்தினால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்யுமாறு சிரஞ்சீவியிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்கோபால் பஜாஜ் என்ற விநியோகஸ்தர், சிரஞ்சீவிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'ஆச்சார்யாவால்' ஏற்பட்ட கணிசமான நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு கோரியுள்ளார். இந்தப் படத்தால் தனக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட பண நெருக்கடியை ஈடுக்கட்ட உதவுமாறும் கோரியுள்ளார்.

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக சிரஞ்சீவியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''ஆச்சார்யா படம் நஷ்டமானதையடுத்து நானும், ராம்சரணும் 80% பணத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துவிட்டோம். படம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆச்சார்யா படம் குறித்த எந்த குற்றவுணர்வும் எனக்கில்லை'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x