

சுந்தர்.சி இயக்கும் 'காஃபி வித் காதல்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு 'அரண்மனை 3' படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'பென்ஸ் மீடியா நிறுவனங்கள்' இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
மூன்று நாயகர்கள், மூன்று நாயகிகள் நடிக்கும் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கலர்ஃபுல்லான ட்ரெய்லர் விருப்பமில்லாத திருமணங்கள் குறித்தும், காதல் பாதைகள் தடம் மாறுவது குறித்த கதையை படம் மையமாக கொண்டிருப்பதை உணர்த்துகிறது. "தப்பான ஆளோட இருக்குறதவிட தனியா இருக்குறதே மேல்", ''நம்ம லைஃப்ல கூடவே ஆயிரம் பேர் வருவாங்க; ஆனா ஒருத்தி மட்டும் தான் கூடவே இருப்பா. சக்சஸூக்கு பாஸ்வேர்டா இருப்பா'' போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன. ட்ரெய்லரில் வரும் யோகிபாபு - ரெடின் கிங்ஸ்லி கூட்டணியில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் நிலையில், ட்ரெய்லரின் இறுதி டயலாக் கவனிக்க வைக்கிறது. படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.