Published : 19 Jul 2014 10:39 AM
Last Updated : 19 Jul 2014 10:39 AM

வாக்குப்பதிவு எந்திர மோசடியை கண்டித்து பா.ம.க. போராட்டம்: ராமதாஸ்

தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க.வினர் விதிமீறல்களில் ஈடுப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், இதனை கண்டித்து வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப் பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்த ஜெயலலிதா, காவல்துறையுடனும், தேர்தல் ஆணையத்துடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு அனைத்து வகையான முறைகேடுகளையும் செய்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அ.தி.மு.க.வினர் விதிமீறல்களில் ஈடுபட்டனர். ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சாரக் கூட்டங்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் வாரி வழங்கப்பட்டன. இதற்கு வசதியாக, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வினரின் முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாருக்கும் ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டும், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலில் பண வினியோகம் செய்யப்பட்டதை தடுக்க முடியவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டது. எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அ.தி.மு.க. வேட்பாளருக்கே வாக்குகள் பதிவாகும் வகையில் எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டது.

இதனால் தான் அ.தி.மு.க.வால் 37 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் பெரும்பாலான வாக்குகள் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு வாக்குகள் பதிவாகும் வகையில் செய்ய முடியும் என்பதை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகமும், ஹைதராபாத்தைச் சேர்ந்த நெட் இந்தியா நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அஸ்ஸாம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட சில வாக்குப்பதிவு எந்திரங்களில் அனைத்து வாக்குகளும் ஒரே கட்சிக்கு பதிவானதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டிருக்கிறது. அதேபோல் தான் தமிழகத்திலும் வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற உறுதியான ஐயம் எழுந்துள்ளது.

உலகில் இந்தியாவை விட அதிக வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாய் என போற்றப்படும் இங்கிலாந்தில் கூட மக்களவைத் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஜெர்மனியிலும், ஹாலந்திலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டபிறகு அந்த நாடுகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி வந்த நாடுகளில் பிரான்ஸ், பெல்ஜியம் தவிர மீதமுள்ள 6 நாடுகள் வாக்குச்சீட்டுக்கு மாறிவிட்டன. அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் கூட வாக்குச்சீட்டு முறையே உள்ளது.

எனவே, தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த மோசடிகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். இனிவரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 22 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தொடர் முழக்க அறப்போராட்டம் நடைபெறவுள்ளது.

சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டங்களில் கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வார்கள" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x