

''தென்னிந்திய சினிமா பக்கம் அனைவரின் பார்வை திரும்பியுள்ளது. வட இந்தியாவில் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள்'' என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை கே.ஜி திரையரங்கில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் 100-வது நாள் கொண்ட்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ''அடையாளம் தெரியாத குழந்தையாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடித்தபோது, போகும் இடங்களிலெல்லாம் நீதான அந்த புள்ள என்று கேட்பார்கள் சந்தோஷமாக இருக்கும்.
ஆனால், ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுக்கவில்லை. யாரும் கவனிக்க கூட இல்லை. 10 பேர் கூட கண்டுகொள்ளவில்லையே என்ற கவலை இருந்ததது. அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது என்னால் மட்டும் என நினைப்பது முட்டாள் தனம். அதற்கு பல பேர் காரணமாக இருக்கிறார்கள்.
'வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' போல 'வந்தாரை வாழ வைப்பது சினிமாவும் தான்'. 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்தது இந்த சினிமாதான். நான் படிச்சதெல்லாம் கலைஞர்களை தான். நல்ல சினிமாக்களை ஒருபோதும் கை விட்டு விடாதீர்கள். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். என்னை மட்டுமல்ல. நன்றாக நடிக்கும் நடிகர்களை வாழ்த்துங்கள்.
தென்னிந்திய சினிமா பக்கம் அனைவரின் பார்வை திரும்பியுள்ளது. வட இந்தியாவில் 'என்னங்க எல்லாம் அந்தப் பக்கமே ஒளி திரும்பிடுச்சு' என பயப்படுகிறார்கள். புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன்'' என்றார்.