Last Updated : 16 Sep, 2022 03:42 PM

Published : 16 Sep 2022 03:42 PM
Last Updated : 16 Sep 2022 03:42 PM

சினம் Review: கருத்தில் மட்டும் உக்கிரம் போதுமா?

தேவையான நேரங்களில் எழும் கோபம், குற்றவாளிகளுக்கு பயத்தைக் கொடுத்து குற்றங்களைத் தடுக்க வழிவகுக்கும் என்கிறது 'சினம்'. நேர்மையான போலீஸ் அதிகாரி பாரி வெங்கட் (அருண் விஜய்). மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கும் மாதங்கி (பல்லக் லால்வானி) மீது காதல் கொண்டு, திருமணத்துக்காக தன் காதலியின் வீட்டு படியேறி சென்று பெண் கேட்கிறார். தந்தை பெண் தர மறுக்கவே, வீட்டின் சம்மதத்தை மீறி காதலியை கரம்பிடிக்கிறார். அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென ஒருநாள் எல்லாமே மாறிவிடுகிறது.

பாரி வெங்கட்டின் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு பெரும் இழப்பு அவரை முழுமையாக உடைத்துவிடுகிறது. அதனால் சினம் கொண்டு சீறும் அவர், அந்த இழப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து வேட்டையாடத் துடிக்கிறார். தீயாய் விசாரணையில் இறங்கும் அவர், இறுதியில் குற்றவாளிகளை பிடித்தாரா, யார் அவர்கள், என்ன ஆனது என்பதுதான் ‘சினம்’ படத்தின் திரைக்கதை.

அருண் விஜய்க்கு அல்வா சாப்பிடுவது போல் ஒரு கதாபாத்திரம். பொதுவாக காவல் துறை கதாபாத்திரங்களில் தன்னுடைய உடலமைப்பு, கம்பீரமான தோற்றத்தால் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் அருண் விஜய். அந்த வகையில் அளவெடுத்து செய்த இறுக்கமான காக்கி ஆடையில், பார்வையாலேயே எதிரிகளை மிரட்டும் தோரணையுடனும், இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார். தன்னுடை பரந்துவிரிந்த புஜங்களால் படத்தை தாங்குகிறார். நாயகி பல்லக் லால்வானி தாயாக, மனைவியாக, மகளாக குறைந்த காட்சிகளில் தோன்றினாலும் நடிப்பில் நயம் சேர்க்கிறார். காளிவெங்கட் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் நடிப்பு கதையோட்டத்திற்கு உதவுகின்றது.

சமூகக் கருத்துடன் கூடிய ஒரு க்ரைம் - த்ரில்லர் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன். கதையாக பார்த்தால் நாம் ஏற்கெனவே பல படங்களில் பார்த்து புளித்த கதைதான். அதன் ஆக்கத்தை சுவாரஸ்யமாக திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் தடுமாற்றங்கள் பளிச்சிடுகின்றன.

முதல் பாதியை எடுத்துக்கொண்டால் காதல், திணிக்கப்பட்ட பாடல்கள் என திக்கு தெரியாமல் நகரும் திரைக்கதை, கதைக்குள் நுழையவே வெகுநேரம் பிடிக்கிறது. கதையின் பாதையை பார்வையாளர்கள் உள்வாங்கிக்கொள்ள இடைவேளை வரை காத்திருக்க வேண்டிய நிலையில், சண்டைக்காட்சிகளாலும், குற்றவாளிகளைத் தேடிப்பிடிக்கும் சொற்ப காட்சிகள் மூலமாகவும் முதல் பாதியை கடக்க உதவியிருக்கிறார் அருண் விஜய்.

இடைவேளைக்குப்பின் கதைக்குள் நுழையும் படத்தில் விறுவிறுப்பை கூட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த முயற்சியும் கூட ஒரு கட்டத்திற்கு பிறகு எளிதாக கணிக்க கூடிய காட்சிகளாலும், சவால்கள் இல்லாத திரைக்கதையாலும் எடுபடவில்லை. அருண் விஜய் மேற்கொள்ளும் விசாரணை திருப்பங்களோ, விறுவிறுப்போயின்றி சுரமில்லாமல் கடப்பதால் ஒட்டுவதற்கு போராட வேண்டியிருக்கிறது.

ஷபீரின் பின்னணி இசை விசாரணைக் காட்சிகளை விறுவிறுக்க வைக்க முயன்றிருக்கிறது. பாடல்கள் எதுவும் மனதோடு தோயவில்லை. கோபிநாத்தின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளின் அழுத்தத்தை திரைக்கு வெளியே பதியவைக்க பெரும் உதவி புரிகிறது. அதோடு, ராஜா முகமதின் கச்சிதமான காட்சித்தொகுப்பு திரைக்கதை அயற்சியை குறைக்க முடிந்த அளவுக்கு முயன்றிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி, தமிழ் சினிமா சில வழக்கமான பாணிகளிலிருந்து மெதுவாக தன்னை மீட்டெடுத்து மீளாய்வு செய்து வருகிறது. அப்படி சென்னையின் பூர்வகுடி மக்கள் மீதான பொதுசமூகத்தின் பொதுப்புத்தி மழுங்கடிப்பட்டு வரும் நிலையில், 'சினம்' குடிசைப் பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்களை குற்றவாளிகளாக்க முயன்றிருப்பது வேதனை. குற்றம் என்றதும் காவலரான அருண் விஜய் வாகனம் அந்த மக்களின் குடியிருப்புகளுக்குள் செல்வதும், கானா பாடும் இளைஞர்களிடம் மட்டும் கஞ்சா புழங்குவதாக காட்டுவதும் நெருடல்.

மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தினர் வாழும் பகுதிகளில் அருண் விஜய்யும் சரி, படத்தின் கேமராவும் சரி பயணிக்காதது, சென்னையில் வேறு எங்கும் கிளைகள் இல்லையோ என்ற அழுத்தமான கேள்வியை எழ வைக்கிறது. போலவே, எளிய மக்கள் மீது நீளும் காவல் துறையின் கைகளும், அதிகாரக் குரல்களும், சொகுசு கார்கள் புழங்கும் பகுதிகளில் நீண்டுவிடுமா என்பதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது.

மொத்தத்தில் வெறும் அழுத்தமான கருத்தை மட்டும் சுமந்துகொண்டு சுவாரஸ்யமில்லாத திரைக்கதை எழுத்தாலும், கருத்தியல் ரீதியான தடுமாற்றத்தாலும் சினத்தின் ஆக்ரோஷம் திரையில் பிரதிபலித்ததா என்றால் அது கேள்விக்குறியே!

தவறவிடாதீர்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x