Published : 07 Sep 2022 02:18 PM
Last Updated : 07 Sep 2022 02:18 PM

“ரஜினி இடத்தில் கார்த்தி... எனக்கு பதில் ஜெயம் ரவி” - கமல் பகிர்ந்த தகவல்கள்

‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

சென்னை: “மணிரத்னத்தின் வெற்றி பட்டியல்களில் மிகக் முக்கிய வெற்றிப் படமாக ‘பொன்னியின் செல்வன்’ இருக்கும் என்று” கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹசன் இணைந்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.

இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது: “பொன்னியின் செல்வன் படத்தின் உரிமையை மக்கள் திலகம் எம்ஜிஆர் வாங்கி வைத்திருந்தார். நான் அப்படத்தின் உரிமையை அவரிடம் கேட்டபோது அதனை அவர் என்னிடம் கொடுத்தார். ஆனால், சீக்கிரம் எடுத்துவிடு என்று கூறினார். அப்போது எனக்கு புரியவில்லை. ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை. என் கையை விட்டு சென்ற வருத்தம் எனக்கு இருந்தது.

படத்தை எடுக்க நினைத்தபோது வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார். அதைக் கேட்ட எனக்கு ஷாக்காக இருந்தது. ஏனெனில், அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி, சிவாஜி சாரே ரஜினின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டுவிட்டு... அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? ‘நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய்’ என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று... ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம் ரவியும் நடிக்க கிடைத்துள்ளது.

வெற்றி வரும், தோல்வி வரும்... ஆனால், அதை புரிந்து கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் படத்தை ஒன்று மணிரத்னம் எடுப்பார் அல்லது நான் எடுப்பேன் என்று நினைத்தேன். மணிரத்னம் வைராக்கியமாக எடுத்துவிட்டார். நான் முயற்சி செய்தேன், ஆனால் மணிரத்னம் தொடர்ச்சியாக முயன்று வென்றிருக்கிறார்.

மணிரத்னத்தின் வெற்றிப் பட்டியல்களில் மிகக் முக்கிய வெற்றிப் படமாக இது இருக்கும். இதனை நான் மேடை அலங்காரத்துக்காக சொல்லவில்லை” என்று கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x