

வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வின்னைத் தாண்டி வருவாயா’ ‘கோ’, ‘வெப்பம்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ உட்பட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடைன்மெண்ட் தற்போது விஜய்சேதுபதி - சூரி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் 'விடுதலை' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை- பாகம் 1 இன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விடுதலை 2 ஆம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் விடுதலை- பாகம் 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்காக ரூபாய் 10 கோடி மதிப்பில் ரயில், ரயில்வே பாலம் ஆகியவை செட் போடப்பட்டு காட்சிகள் படமாக்கபட்டுள்ளன. ரயில் பெட்டிகள், பாலம் ஆகியவை அச்சு அசலாக 90களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக ரயில்வே துறையிடமிருந்தே பொருட்கள் வாங்கப்பட்டு இந்த செட்டினை உருவாக்கியிருக்கிறார்கள். கொடைக்கானலை அடுத்த சிறுமலையில் இப்படத்தின் கலை இயக்குநர் ஜாக்கி தலைமையிலான குழுவினர் ஒரு மலை கிராமத்தையே உருவாக்கிக் கொடுத்திருகிறார்கள். படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.