Published : 25 Aug 2022 07:47 PM
Last Updated : 25 Aug 2022 07:47 PM

“நேரடியாக ஓடிடியில் வெளியிட நினைத்தேன்” - ‘ஜெர்ஸி’ தோல்வி அனுபவம் பகிர்ந்த ஷாஹித்

“ஜெர்ஸி படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. படத்தை ஓடிடியில் வெளியிட்டிருக்கலாம் என்று நினைத்தேன்'' என ஜெர்ஸி பட தோல்வி குறித்து ஷாஹித் கபூர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் நானி நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானரில் உருவான 'ஜெர்ஸி' படம் இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் ஷாஹித் கபூர், மிருளான் தாக்கூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கௌதம் தின்னூரி இயக்கியிருந்த இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். படம் கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி வெளியானது. விஜய்யின் 'பீஸ்ட்', யஷ் நடித்த 'கேஜிஎஃப்2' படங்கள் வெளியான சமயம் அது. இந்தப் படங்கள் வெளியாகி 10 நாட்களுக்குப் பிறகு தான் 'ஜெர்ஸி' வெளியானது என்றாலும், படம் படுதோல்வியை சந்தித்தது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் படம் வெறும் ரூ.30 கோடியை கூட சரிவர ஈட்டவில்லை.

இந்நிலையில், ‘ஜெர்ஸி’ படத்தின் தோல்வி குறித்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பேசியுள்ள ஷாஹித் கபூர், ''நாங்கள் கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதியே வெளியிட திட்டமிட்டோம். ஆனால், கரோனா தொற்று பரவலால் டெல்லி மூடப்பட்ட நிலையில் எங்களால் படத்தை வெளியிட முடியவில்லை. எல்லாவற்றிலும் டிசம்பர் வெளியீடு என அச்சிடப்பட்டு விளம்பரப்படுத்திவிட்டோம். ஆனால், படம் வெளியாகவில்லை.

ஜெர்ஸி என் மனதுக்கு நெருக்கமான படம்மட்டுமல்லாமல், அந்தக் கதாபாத்திரத்தில் நான் எமோஷனலாக கனெக்ட்டாகிவிட்டேன். படத்தில் வரும் தந்தை -மகன் உறவு தனிப்பட்ட முறையில் என்னை பாதித்துவிட்டது. மேலும், எனது இயக்குனரும் தயாரிப்பாளருமான அமன் மற்றும் கெளதம் இருவரும் படம் பெரிய திரைக்கு வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

படம் டிசம்பரில் வெளியிடப்படாத நிலையில், நேரடியாக ஓடிடியில் வெளியிடலாம் என நினைத்தேன். ஏனென்றால், படத்தைப் பற்றிய ஹைப்பை மீண்டும் மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால், வேறுவழியில்லாமல் துரதிஷ்டவசமாக ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட்டோம். காரணம் பார்வையாளர்கள் வேறொரு மனநிலையில், அந்த நேரத்தில் வந்த குறிப்பிட்ட வகை சினிமாக்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதனால் அது எங்களுக்கு சிறந்த மாதமாக அமையவில்லை. இருப்பினும் நாங்கள் தேதியை மாற்ற பலமுறை மாற்றிவிட்டோம். மீண்டும் அப்படி செய்ய முடியாது என்பதால் நம்பிக்கையுடன் வெளியிட்டோம். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்த விஷயத்தில் ஒருவேளை நாங்கள் சரியானதைச் செய்யவில்லை என்று நினைக்கிறேன். படத்தை காப்பாற்றியிருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x