Published : 25 Aug 2022 12:37 PM
Last Updated : 25 Aug 2022 12:37 PM

லைகர் Review: நாயகனின் அடியில் எதிராளி கூட தப்பிக்க முடிகிறது. நம்மால்..?

தன் அப்பா தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை பெற முயற்சிக்கும் மகனின் போராட்டம்தான் 'லைகர்'. மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி மும்பை வருகின்றார் விஜய் தேவரகொண்டா. அங்கே தன் தாய் ரம்யாகிருஷ்ணனுடன் சேர்ந்து தெருவோரத்தில் டீ கடை நடத்துகிறார். மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் புகழ்பெற்ற பயிற்சியாளரை சந்தித்து பயிற்சியில் இணையும் விஜய் தேவரகொண்டா வாழ்வில் அனன்யா பாண்டே குறுக்கிட சில பல பிரச்சினைக்குப் பின் இறுதியாக அவர் அந்தப் பட்டத்தை வென்றாரா? இல்லையா? (பார்வையாளர்களை கொன்றாரா?) என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை.

லைகராக விஜய் தேவரகொண்டா. திக்கிப் பேசுவது, சிக்ஸ்பேக் கொண்டு மிரட்டுவது, வெறி கொண்டு ரிங்கில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது என படத்திற்கான அவரது உழைப்பு திரையில் தெறிக்கிறது. படத்திற்கு ஒரே பலம் அவர் மட்டுமே. மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்கும் அவரது சுமையை பகிர்ந்துகொள்ள இயக்குநர் கூட தயாராக இல்லை. 2கே கிட்ஸ் வார்த்தையில் சொன்னால் 'கிறிஞ்சு' நாயகியாக அனன்யா பாண்டே செய்யும் செயல்களை திரையரங்கில் ஏசியைத் தாண்டி நம்மை சூடேற்றுகிறது. இயக்குநர் பூரி ஜெகன்னாத்துக்கு அவர் மேல் என்ன கோபமோ, மோசமான ரைட்டிங் மொத்த கதாபாத்திரத்தையும் சீர்குலைத்திருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் ஆரம்பத்தில் சில காட்சிகள் சிறப்பாக நடித்திருந்தாலும், படம் முழுக்க தேவையில்லாத எமோஷனுடன் கத்திக் கொண்டிருக்கிறார். பயிற்சியாளராக வரும் ரோனித் ராய் கதாபாத்திரம் ஆறுதல். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பாக்ஸர் மைக் டைசன், விஜய் தேவரகொண்டாவிடம் அடிவாங்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல கூப்பிட்டு வைத்து கலாய்த்திருப்பது வேதனை.(இதெல்லாம் அமெரிக்காகாரன் பாத்தா நம்ம என்ன நினைப்பான்?)

பூரிஜெகநாத் 'லைகர்'-ஐ படமாக எடுப்பதற்கு பதிலாக மாஷப் வீடியோவாக்கி கொடுத்திருக்கிறார். தொடக்கத்தில் ஒரு சண்டைக்காட்சி, பின்னர் நாயகிக்கு இன்ட்ரோ சாங்க், காதல், மீண்டும் ஒரு டூயட் என எல்லாவற்றையும் கட் செய்து ஜோடித்திருக்கிறார். பெயருக்கு ஒரு வில்லன், கண்டதும் காதலிக்கும் நாயகி, நோக்கமின்றி நகரும் திரைக்கதை, இதையெல்லாம் பொறுத்துக்கொண்டாலும், அடிக்கடி வந்து துன்புறுத்தும் பாடல்கள் என படத்தில் நிறைய சோதனைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

படத்தில் முக்கியமான பிரச்சினை தான் எடுத்துக்கொண்ட கதைக்கு கொஞ்சம் கூட நியாயம் சேர்க்காமல் நகர்வதுதான். மார்ஷியல் ஆர்ட் சாம்பியன்சிப் தான் கதை எனும்போது, அதைப்பற்றி எந்த நுணுக்கத்தையும் சொல்லாமல், அதன் நெளிவு, சுளிவுகளை பதியவைக்காமல், எந்தவித சுவாரஸ்யமுமில்லாமல் அடுத்தடுத்த ரவுண்டுகளை வென்று நாயகன் முன்னேறுவது 'எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா இயக்குநரே?' என கேட்க வைக்கிறது. விஜய் தேவரகொண்டா கூட எதிராளியை ஒரு கட்டத்தில் பாவம் பார்த்து அடிப்பதை நிறுத்திவிடுகிறார். ஆனால் இயக்குநர் பூரி ஜெகநாத்..?

எந்தவித கடுமையான பயிற்சிகளுமில்லாமல் நாயகன் எல்லாரையும் அடித்து துவம்சம் செய்கிறார். அதிலும் குறிப்பாக மகன் விஜய் தேவரகொண்டா வெற்றிபெற தாய் சொல்லும் தாரகமந்திரம் பலே! இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தாலும், முழுக்க முழுக்க பெண் வெறுப்பு கொண்ட ஆண்மையவாத சினிமாவாக இயக்கியிருக்கிறார்கள். அதற்கு தானாக வந்து தலையை கொடுத்திருக்கிறார் அனன்யா பாண்டே. மோசமான பெண் கதாபாத்திர வடிவமைப்பின் மூலம் தனது ஆண்மையவாத வெறியை தீர்த்திருக்கிறார் இயக்குநர். ஒரு கட்டத்தில் எதுவுமே ஓகே ஆகாது என நினைத்ததும் நாட்டுப்பற்றை கையிலெடுத்திருக்கிறார்கள். ஆனால் இறுதியில் அதுவும் கைவிட்டு நழுவியிருப்பது பரிதாபம்!

விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு நம் கண்கள் தப்பிக்கின்றன. காட்சிகளுக்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பில் பாதியை கதையில் இயக்குநர் கொடுத்திருக்கலாம். சுனில் காஷ்யப்பின் பின்னணி இசை பெரிதாய் கவரவில்லை. இறுதிக் காட்சியில் மைக் டைசனை டம்மியாக்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு தீரா வேதனை.

ஒரு காட்சியில் விஜய் தேவரகொண்டா எதிராளியின் கழுத்தை பிடித்து நெரிக்கிறார். ஆனால், எதிராளியால் எளிதாக கிவ் அப் (giveup) சொல்லி தப்பித்துக்கொள்ள முடிகிறது. ஆனால், படம் பார்க்கும் நமக்கு தான் அப்படியான வாய்ப்பு எதுவும் வாய்க்கப் பெறவில்லை.

தவறவிடாதீர்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x