Last Updated : 23 Oct, 2016 04:21 PM

 

Published : 23 Oct 2016 04:21 PM
Last Updated : 23 Oct 2016 04:21 PM

சினிமா துறை என் தாய்வீடு: செயலாளர் விஷால் உருக்கம்

சினிமாத் துறை என்பது என் தாய்வீடு மாதிரி, அதனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கும் விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். படப்பிடிப்பு காரணமாக பொருளாளர் கார்த்தி மட்டும் கலந்து கொள்ளவில்லை.

விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியது, "இந்த தீபாவளியை அனைவரும் மாசற்ற தீபாவளியாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்கத்தில் எங்களுக்கு டீ வேண்டும் என்றால் கூட எங்களுடைய காசில் தான் நாங்கள் வாங்கி சாப்பிட வேண்டும். அந்த அளவுக்கு நாங்கள் சிக்கனமாக நடிகர் சங்கத்தில் இருந்து வருகிறோம். இந்த தீபாவளிக்கும் சென்ற தீபாவளியைப் போன்று சிறப்பாக அனைவருக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது அதற்கு முக்கியக் காரணம் நமது நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர் பாபி சிம்ஹா, சூரி ஆகியோர் தான்.

நாடக நடிகர்கள் பலர் நாங்களும் நிர்வாகத்துடன் இணைந்து தீபாவளிப் பரிசு வழங்குகிறோம் என்று கூறி எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் அவ்வாறு கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசியது, "தீபாவளிக்கு அனைவருக்கும் சிறப்புப் பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்புப் பரிசு வழங்க உறுதுணையாக இருந்த ராம்ராஜ் நிறுவனத்தினருக்கு நன்றி. பொருளாளர் கார்த்தி, சுந்தர்.சி, குஷ்பூ,​ நடிகர் பாபி சிம்ஹா, சூரி ஆகியோரும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்க உறுதுணையாக இருந்தனர். ராம்ராஜ் நிறுவனத்தினரின் உதவியால் தான் நாங்கள் இப்போது நடிகர் சங்கத்தின் 3000 உறுப்பினர்களுக்கு வேஷ்டி சட்டையை வழங்கியுள்ளோம்.

இந்த நிலத்தின் மீது இருந்த அனைத்துக் கடனையும் அடைத்தாகி விட்டது. நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள், எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்துத் தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார். இதை பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம். தமிழக முதல்வர் விரைவாக குணமடைய நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம்.

எனக்கு பொதுச் செயலாளராக இருப்பதற்கு வயது பத்தாது. ஆனால், நல்லது செய்ய வேண்டும் என்றால் இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும் என்பதால் தேர்தலில் நின்று ஜெயித்தேன். இதற்காக செயல்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. CMDA ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். 3 வருடங்கள் ஊழலன்றி நாங்கள் பணிபுரிவோம். ஆனால், முந்தைய ஊழலின் மீது நடவடிக்கை எடுப்போம்.

நவம்பர் 27-ம் தேதி லயோலா கல்லூரியில் பொதுக்குழு கூடுகிறது. போனமுறை 1800 பேர் பொதுக்குழுவுக்கு வந்தார்கள். இம்முறை சுமார் 2000 பேரை எதிர்பார்க்கிறோம். சிவகார்த்திகேயன் பிரச்சினை குறித்து பேசி, விரைவில் நல்ல தீர்வு காணப்படும். நடிகர், நடிகைகள் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தால் மட்டுமே, என்ன பிரச்சினையெல்லாம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவரும். சினிமாத் துறை என்பது என் தாய்வீடு மாதிரி, அதனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் மூத்த நடிகர், நடிகைகளான சரஸ்வதி , கமலா , மணிஐயா , ஜெய்பாலையா , ஜெயராமன் ,டி.கே.எஸ்.நடராஜன், ராஜ்கிரண் உள்ளிட்ட 500​ க்கும் ​ மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளிப் பரிசு வழங்கப்பட்டது. தீபாவளிப் பரிசான வேட்டி, சட்டை, சேலை, இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x