

'என்னை விட சிறந்த நடிகர் கார்த்தி என்பதை எந்த இடத்திலும் நான் பதிவு செய்ய தயங்கமாட்டேன்'' என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
மதுரையில் 'விருமன்' பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்திக், அதிதி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, முத்தையா, சூரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி, ''கிராமத்து படங்களில் நடிக்க வேண்டும் என பெரிய ஆசை. 'கொம்பன்' படம் வெற்றியடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. 'விருமன்' படத்தில் அப்பாதான் நாயகனுக்கு வில்லன். அப்பாவே தவறு செய்தாலும் தண்டிக்கும் நாயகன் என்ற கதையை முத்தையா சொன்னார்.
எனக்கு கதை பிடித்தது. பிரகாஷ்ராஜூடன் நடித்தது மகிழ்ச்சி. பெண்ணாக அதிதி திரையுலகில் நுழைந்ததுள்ளார். அது சாதாரணமான விஷயமல்ல. சொல்லப்போனால், என்னையே எங்க அப்பா நடிக்கவே கூடாது என்றார். ஒவ்வொரு முறையும் ஷூட்டிங் செல்லும்போது, பெண்களை எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்று அப்பா சொல்லிக்கொடுத்துள்ளார். முத்தையாவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவேண்டும். கடும் உழைப்பாளி அவர். 'பருத்தி வீரன்' படத்திற்கு பிறகு மீண்டும் மதுரையில் வாழ்ந்த திருப்தி கிடைத்துள்ளது. எல்லாருக்கும் நன்றி'' என்றார்.
தொடர்ந்து பேசிய சூர்யா, ''மதுரையில் எனக்கு அழகான நினைவுகள் உண்டு. மதுரையில் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. எல்லாமே உண்மைக்கதைகள். கடைக்கோடி கிராமத்திலிருந்து வந்து இயக்குநர் இமயமாக இருக்கிறார் பாரதிராஜா. கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு பெரும் உத்வேகம் பாரதிராஜா. அவரது வீட்டில் நான் விளையாடியிருக்கிறேன். எந்த விஷயமாக இருந்தாலும் என் கூடவே இருக்கேன் என்றார் அவர்.
அது எனக்கு பெரிய சப்போர்ட். மதுரை மக்களின் குரலை பதிவு செய்து வரும் சு.வெங்கடேசன் விழாவில் கலந்துகொண்டதற்கு நன்றி. அவருடன் ஒரு பயணத்தை தொடங்கியிருக்கிறேன். விரைவில் அறிவிப்பேன். விருமன் படத்தில் இறுதியில் வைக்கப்பட்ட வசனங்களுக்காகவே படத்தை எடுத்தோம்.
கார்த்தியை விட நான் சினிமாவுக்கு முன்பே வந்திருந்தாலும், சினிமாவை அதிகம் நேசிப்பது கார்த்தி தான். என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி. தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது, நான் நியூயார்க்கில் இருந்தேன். மதுரை, கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாடும் ஊர். இந்த இடத்தில் விருமன் இசைவெளியிட்டு நிகழ்ச்சி நடப்பதை வரமாக பார்க்கிறோம். '' என்றார்.