Published : 30 Jul 2022 06:46 AM
Last Updated : 30 Jul 2022 06:46 AM

விக்ராந்த் ரோணா - இந்து டாக்கீஸ் திரை விமர்சனம்

கமரோட்டு டவுனுக்கு வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட, அதை விசாரிக்கும் அதிகாரியாக, தனது மகளுடன் அங்குவருகிறார் விக்ராந்த் ரோணா (சுதீப்). வரும்போதே சில அசாதாரண நிகழ்வுகளை காண்கிறார். ஆச்சரியத்தோடு விசாரணையை தொடங்கினால், அங்கு 16 குழந்தைகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. காட்டுக்குள் இருக்கும் பேய்தான் இதை செய்ததாக நம்புகிறது ஊர். உண்மையில் அதை செய்தது யார், எதற்காக இந்த கொலைகள்? என்பதை விக்ராந்த் ரோணா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படம்.

இதற்கிடையே, கோயில் நகையை திருடிவிட்டு ஓடிய ஊர் பெரியவர் ஜனார்த்தனின் (மதுசூதன் ராவ்) மகன் சஞ்சு, (நிரூப் பண்டாரி) 26 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்புவது, அவரது வீட்டுக்கு வரும் உறவினர் மகள் பன்னாவுடன் (நீதா அசோக்) சஞ்சுவுக்கு காதல், பிளாஷ்பேக்கில் நடக்கும் மோதல் என மற்றொரு டிராக்கில் ஒரு கதை செல்கிறது.

மிரட்டலான பழிவாங்கும் படத்தை கொடுக்கமுயன்ற இயக்குநர் அனூப் பண்டாரி, அதில் பாதி வெற்றி பெறுகிறார். அமானுஷ்ய காட்சிகளில் ரசிகருக்கு பயத்தை ஏற்படுத்துவது, அமைக்கப்பட்டிருக்கும் அரங்கங்களின் வழி விரிகிற காட்சிகளின் பிரம்மாண்டம் என படம் ரசிக்க வைக்கிறது.

விக்ராந்த் ரோணாவாக, கிச்சா சுதீப். கையில் சுருட்டு, இடுப்பில் சொருகிய துப்பாக்கி, அசால்ட் பார்வை, சந்தேக வலைக்குள் ஒவ்வொருவரையும் கொண்டுவரும் விதம், மகளிடம் காட்டும் பாசம், காட்டுக்குள் தனியாக செல்லும் துணிச்சல், கிளைமாக்ஸ் மோதல் என தனது ஹீரோயிசத்துக்கு நியாயம் செய்கிறார்.

வீராப்பு கொண்ட கோபக்கார பெரியவராக மதுசூதன் ராவ் மனதில் பதிகிறார். நீதா அசோக் இன்னொருவருக்கு நிச்சயிக்கப்பட்டு, நிரூப்பிடம் காதல்வயப்பட்டு கலங்கும் காட்சியில் தனித்து தெரிகிறார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு குத்தாட்டத்தோடு போய்விடுகிறார். அம்மாவாக வரும்பிரியா வி., விஸ்வநாத்தாக வரும் ரவிசங்கர் கவுடா உட்பட பலரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்கின்றனர்.

வில்லியம் டேவிட்டின் 3D தொழில் நுட்ப ஒளிப்பதிவு படத்தின் பலம் என்றாலும், முழு படத்தையும் இருட்டில் பார்ப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. அஜனீஸ் லோகநாத்தின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் வேகத்தடை.

கதை நடக்கும் காலகட்டம் குறிப்பிடப்படவில்லை என்பதால் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முன்னும் பின்னுமாக கதையை சொல்லும் திரைக்கதை, படத்தோடு ஒன்றவிடாமல் தடுக்கிறது. ஊரில் 16 குழந்தைகள் கொல்லப்பட்டும், யாரும் பதற்றமோ, எச்சரிக்கையோ இல்லாமல் அவரவர் பாட்டுக்கு, பாடிக்கொண்டு அலைகின்றனர். இதை எல்லாம் கவனித்து 15 நிமிட காட்சிகளை வெட்டியிருந்தால், விக்ராந்த் ரோணாவுக்கு அடித்திருக்கலாம் ஜில் விசில்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x