Published : 24 Jul 2022 12:29 PM
Last Updated : 24 Jul 2022 12:29 PM

தேஜாவு: திரை விமர்சனம்

சுப்ரமணியன் என்கிற புனைக்கதை எழுத்தாளர் தனது கதையில் அவர் எழுதும் சம்பவங்கள் அப்படியே நிஜத்திலும் நடக்கின்றன. இதுபற்றி போலீஸில் அவர் புகார் கொடுக்க, காவல் துறைஅலட்சியப்படுத்துகிறது. எழுத்தாளரின் கதையில் வருவதுபோல பூஜா (ஸ்மிருதி வெங்கட்) என்கிற பெண்ணை முகமுடி அணிந்த மூவர் கடத்திச் செல்கின்றனர்.

கடத்தப்பட்டவர், காவல் அதிகாரியின் (மதுபாலா) மகள் என்பதால், தகவல் வெளியே தெரியாமல் இருக்க, விக்ரம் குமார் (அருள்நிதி) என்ற ரகசிய அதிகாரியை நியமித்து விசாரணையை தொடங்குகின்றனர். கடத்தப்பட்ட பூஜாவுக்கு என்ன ஆனது? விக்ரம்குமாரால் பூஜாவை கண்டுபிடிக்க முடிந்ததா? கதையில் எழுதப்படுவது நிஜத்தில் நடப்பதன் மர்ம பின்னணி என்ன என்பதுதான் கதை.

‘ஸ்ட்ரேஞ்சர் தேன் ஃபிக்‌ஷன்’ திரைப்படத்தின் ஒரு பொறியைத் தொட்ட படம் என்றாலும், முதல் பாதி படம் முழுக்க வரிசைகட்டி வந்துகொண்டே இருக்கும் திருப்பங்களால் பார்வையாளர்களை கவர்ந்துவிடுகிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன். ஆனால், புதிர்களை விடுவிக்கும் இரண்டாம் பாதி ஊகித்துவிடக்கூடிய பலவீனத்துடன் நகர்கிறது.

இருப்பினும் எந்த இடத்திலும் அயர்ச்சியை உண்டுபண்ணாத காட்சியமைப்புகளும், படமாக்கமும் விறுவிறுப்பான த்ரில்லர் அனுபவத்தை தருகின்றன.படத்தில், பாட்டு, நகைச்சுவை என கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல், கதை,திரைக்கதையை நம்பியே ரசிக்கத்தக்க க்ரைம் த்ரில்லரை கொடுப்பதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர். அதேநேரம், புதிர்களுக்கான விடையை விடுவிக்கும்போது ‘லாஜிக்’குகளை இன்னும் வலுவாக அமைக்கும் சவாலில் திணறுகிறார்.

ஜிப்ரானின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை பதற்றத்துடன் வைக்கிறது. பி.ஜி.முத்தையாவின் ஓளிப்பதிவு, ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கான மர்மங்களை காட்சிமொழியில் கொண்டுவருவதற்கான ஒளி
யமைப்பு, கோணங்கள், நகர்வுகள் என அனைத்து அம்சங்களிலும் தேர்ச்சியுடன் பதிவு செய்கிறது.

விக்ரம்குமாராக தோற்றத்திலும் நடிப்பிலும் ஸ்மார்ட்டாக வருகிறார் அருள்நிதி. அவரது ‘அண்டர்பிளே’ நடிப்பும், அளவான ஆக்‌ஷனும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது. அவருக்கு அடுத்து, சுப்ரமணியன் என்கிற எழுத்தாளர் கதாபாத்திரத்தில் வரும் அச்யுத் குமாரின் நடிப்பு ஈர்க்கிறது.

இவர்களுடன் மதுபாலா, காளி வெங்கட், ஸ்மிருதி வெங்கட், சேத்தன் உள்ளிட்டோரும் தேவையானதை கச்சிதமாக கொடுத்துள்ளனர். படத்தில் தவிர்த்திருக்க வேண்டிய பலவீனங்களில் முதன்மையானது இரண்டாம் பாதியில் வந்துபோகும் ப்ளாஷ் பேக்குகள். கதாநாயகன் சொல்வதை மற்றவர்கள் கண்மூடித்தனமாக கேட்பதை யும் மாற்றியிருக்கலாம். இந்த குறைகளை கடந்து, புதிய த்ரில்லர் அனுபவத்தை தந்து கவர்ந்துவிடுகிறது ‘தேஜாவு’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x