Published : 24 Jul 2022 12:14 PM
Last Updated : 24 Jul 2022 12:14 PM
ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் அப்பாவுக்கு ஓய்வு கொடுத்து, விளையாட்டுத் திறமை மூலம் தனது எளிய குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறார் கல்லூரி மாணவர் தமிழ் (சாம் ஜோன்ஸ்). அதே கல்லூரியில் பயிலும் பாரதி (கயல் ஆனந்தி), தமிழின் தனித்திறன் பார்த்து அவருடன் நட்பாகிறார். ஆனால், உள்ளூரின் மூத்த அரசியல்வாதியும், பாரதியின் பெரியப்பாவுமான முத்தையா (வேல.ராமமூர்த்தி), அவரது தம்பி (ஏ.வெங்கடேஷ்), மகன் (பிரவீன்குமார்) ஆகியோர் தமிழும், பாரதியும் காதலிப்பதாக தவறாக கருதுகின்றனர். அதனால், தமிழை அவர்கள் என்ன செய் தார்கள்? அதன்பிறகு தமிழ் எதிர்கொண்ட வாழ்க்கை என்ன என்பது கதை.
மதுரையில் நடக்கிறது கதை. ‘நேட்டிவிட்டி’யுடன் கூடிய உள்ளூர் அரசியல், வர்க்கம், சாதி, உறவினர்கள் செய்யும் உள்ளடி துரோகம் ஆகியவற்றோடு விளையாட்டையும் திரைக்கதையில் நேர்த்தியாக நுழைத்து விறுவிறுப்பு குன்றாமல் படத்தை தந்திருக்கிறார், எழுதி, இயக்கியுள்ள தாமரைச் செல்வன்.
கதாபாத்திரங்களை அதனதன் இயல்பில் வலிமையாகவும், திருத்தமாகவும் எழுதியிருப்பதிலும் தனித்து கவனம் ஈர்க்கிறார்.
நண்பனை காப்பாற்றப் போராடும் ‘பாரதி’யாக ஆனந்திக்கு கனமான கதாபாத்திரம். அதில் தனது முந்தைய பட கதாபாத்திரங்களின் சாயலை காட்டாமல் ஜொலிக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் அவர் காதலை சொல்லும் இக்கட்டாண தருணம் இயல்பு!
கல்வியுடன் விளையாட்டு போன்ற தனித்திறமை மூலம் குடும்பத்தை முன்னேற்றிவிட முடியும் என்று நம்பிக்கையுடன், முன்னேறிச் செல்லும்போது இடறிவிழுந்து இழப்பின் வலியை வெளிப்படுத் தும் தருணங்களில் அறிமுக நாயகனாகக் கவர்கிறார் சாம் ஜோன்ஸ்.
சாதிய வன்மத்தையும் அதன் வழியாக வெளிப்படும் மூர்க்கத்தையும் வெளிப்படுத்துவதில் அதிர வைக்கிறார் வேல.
ராமமூர்த்தி.
வசனங்கள் வழியாக வாழும் குணச்சித்திர கதாபாத்திரம் கரு.பழனியப்பனுக்கு நன்றாகவே பொருந்துகிறது. துரைபாண்டியாக உள்ளடி செய்வதில் ‘மாஸ்டர்’ என்கிற அளவுக்கு ஜமாய்க் கிறார். ரஜினியின் தன்னம்பிக்கையூட்டும் பஞ்ச் வசனங்கள் வழியாக தன் வாழ்க்கையை அமைத்துகொண்ட ஆட்டோ ஓட்டுநராக, ஒரு சாமானியக் குடும்பத்தின் தந்தையாக நகைச்சுவைக்கு வெளியே நின்று குணச்சித்திர நடிப்பை தருகிறார் முனீஸ்காந்த்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு இன்றைய மதுரையை ஜோடனை ஏதுமின்றி காட்டுகிறது.படத்தின் இறுதிக்காட்சி ஏற்படுத்தும் திடுக்கிடலில் அழுத்தம் குறைவாக இருந்தாலும், ஒரு காதல் கதைக்குள் சாதி, அரசியல், விளையாட்டை நேர்த்தியாக புகுத்திய வகையில், விரைந்தோடும் இந்த ‘நதி’யில் தாராளமாக நீராடலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT