

'இந்த நேரத்தில் எனது தந்தைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என நடிகர் துருவ் விக்ரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். 1990-ல் வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இயக்குநர் பாலாவின் 'சேது' தொடங்கி பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் விரைவில் திரைக்க வரவுள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு என தகவல்கள் வெளியாகின. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதனை மறுத்ததுடன், ''நெஞ்சு வலி காரணமாக நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு இல்லை, தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்'' என விளக்கமளித்து.
தற்போது விக்ரமின் மகன் துருவ்வும் தந்தையின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "அன்பான ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும்... என் தந்தைக்கு நெஞ்சில் லேசான அசௌகரியம் ஏற்பட்டதாலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியானவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்திகள் எங்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த நேரத்தில் எனது தந்தைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சீயான் நலமுடன் இருக்கிறார். ஒரு நாளில் தந்தை வீடு திரும்பவார். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பதிவின் மூலம் வதந்திகள் எல்லாம் களையப்பட்டு தெளிவான புரிதல் உண்டாகும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் துருவ் விக்ரம்.