Published : 06 Jul 2022 02:13 PM
Last Updated : 06 Jul 2022 02:13 PM

உலகின் சிறந்த படங்கள்: Letterboxd பட்டியலில் ‘கடைசி விவசாயி’க்கு 2-ம் இடம்

உலக அளவில் சிறந்த படங்களை வரிசைப்படுத்தும் லெட்டர் பாக்ஸ்டு (Letterboxd) பட்டியலில் விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. இந்தப் படத்தில் விவசாயியாக நல்லாண்டி என்பவர் நடித்திருந்தார். அவரது நடிப்பு யதார்த்தமான விவசாயி ஒருவரை பிரதிபலித்தது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் தியேட்டர் வசூலில் தயாரிப்பாளருக்கு சாதகமாக அமையவில்லை.

இருப்பினும் 'கடைசி விவசாயி' படத்தை பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டினார்கள். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம், தற்போது மற்றொரு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் லெட்டர் பாக்ஸ்டு (Letterboxd) எனும் தளமும் ஒன்று. இந்த இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான, ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்தப் படங்களை பட்டியலிட்டிருக்கிறது. உலகப் படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப் பட்டியலில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி' திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் தளத்தில் உலக அளவிலான சிறந்த படங்களின் பட்டியலில் ராஜமௌலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஆறாவது இடத்திலும், ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்த கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் 11-ம் இடத்திலும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x