Published : 24 Jun 2022 08:57 PM
Last Updated : 24 Jun 2022 08:57 PM

முதல் பார்வை | பட்டாம்பூச்சி - சைக்கோவும் த்ரில்லரும் எங்கே?

சீரியல் கொலைகாரன் ஒருவனின் கொலைகளையும், அதற்கான காரணங்களையும் சைக்கோ - த்ரில்லர் பாணியில் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் 'பட்டாம்பூச்சி'.

1989-களில் நடக்கிறது கதை. தூக்கு கைதியான சுதாகரிடம் (ஜெய்) கடைசி ஆசை என்ன என கேட்கிறார்கள். என்னைப்பற்றி எழுதிய ரிப்போர்டரை பார்க்க வேண்டும் என்கிறார். உடனே அந்த ரிப்போர்டரும் வரவழைக்கப்படுகிறார். அவரிடம் பேசும் சுதாகர் 'செய்யாத கொலைக்காக என்னை தூக்கில் போடுகிறார்கள்' என கூறிவிட்டு, 'இந்த கொலை தான் செய்யலன்னு சொன்னேன. ஆனா 7 கொலை பண்ணிருக்கேன். நான் தான் பட்டாம்பூச்சி' என ட்விட்ஸ்ட் வைக்கிறார்.

உடனே திரை தீப்பிடிக்க, பழைய செய்தித்தாள்கள் புரட்டப்படுகிறது. 'பட்டாம்பூச்சி' என்ற சைகோ கொலைகாரனுக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்ல, 30 நாளில் இவர் தான் 'பட்டாம்பூச்சி' என்ற சைக்கோ கொலைகாரர் என்பதை நிரூபிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அந்தப் பொறுப்பு காவல் அதிகாரி குமரனுக்கு (சுந்தர் சி) வழங்கப்படுகிறது. இறுதியில் சுதாகர் தான் பட்டாம்பூச்சி என்பது நிரூபிக்கப்பட்டதா? அவர் ஏன் கொலைகளை செய்தார்? எதற்காக செய்தார்? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது 'பட்டாம்பூச்சி' படத்தின் திரைக்கதை.

டூஸ் என்கிற ஒருவித நோயால் பாதிக்கப்பட்டிருப்பவராக நடித்திருக்கிறார் ஜெய். கழுத்தை உசுப்பி உசுப்பி நடிக்கும் காட்சிகளில் மெனக்கெட்டிருந்தாலும், அந்த நடிப்பு பார்வையாளர்களுக்கு எந்தவித பாதிப்பையும் உண்டாக்கவில்லை. சைக்கோ கொலைகாரனுக்கான கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொள்ள சிரமபட்டிருக்கிறார். ஆனால், அது அவருக்கு பொருந்தவில்லை.

அவ்வப்போது நடிகர் விஜயின் உடல்மொழியும் வந்து செல்வது உறுத்தல். காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர் சிக்கு சென்டிமென்ட் காட்சிகள் கைகூடவில்லை. எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கிறார். ஆனால் சைக்கோ கொலைக்காரனை மட்டும் அவரால் பிடிக்க முடியவில்லை. செய்தியாளராக நடித்திருக்கும் ஹனி ரோஸ் இறுதி காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். இமான் அண்ணாச்சி தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. சுத்தியலால் ஜெய்யை 4,5 முறை கடுமையாக தாக்குகிறார் ஹனி ரோஸ். ஆனால், அதை ஏதோ தூசு படிந்திருப்பதைப்போல தட்டிவிடுகிறார் ஜெய். இந்தக் காட்சியைப்போல படத்தின் திரைக்கதையும் அவ்வளவு பலவீனமாக இருக்கிறது. சைக்கோ திரில்லர்கள் கதைக்கான விறுவிறுப்போ, பதற்றமோ இல்லாதது ஒட்டுமொத்த படத்தின் நகர்வையும் குலைத்துவிடுகிறது.

ஜெய் கொலை செய்யும்போது நமக்கு எந்த பதற்றமும் ஏற்படுவதில்லை. நிகழ்த்தப்படும் கொடூரமான கொலைகள் உணர்வு ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தாதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. கொலைகளுக்கான காரணங்களில் போதிய நியாயமோ, அழுத்தமோ இல்லை.

ஒரு சைக்கோ கொலைகாரனை உருவாக்கிவிட்டு ஏதாவது ஒரு காரணமும், அவனுக்கு ஒரு பெயரறியாத நோயையும் வைத்துவிட வேண்டும் என்ற க்ளிஷே திரைக்கதை அலுப்பூட்டுகிறது. 1989-ல் கதை நடப்பதாக சொல்லப்படுகிறதே தவிர, அதற்கான எந்த மெனக்கெடலையும் திரையில் காண முடியவில்லை. இன்றைய சென்னையின் சாலைகளும், கட்டிடங்களும் அப்பட்டமாக தெரிகின்றன.

'வீராப்பு', 'ஐந்தாம்படை' உள்ளிட்டபடங்களை இயக்கிய பத்ரி இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். த்ரில்லருக்கான ஒரு நல்ல ஒன்லைன் கதையை எழுதிவிட்டு அதை மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் கொண்டுவர தடுமாறியிருப்பதை உணர முடிகிறது. லாஜிக் இல்லாமல், வெறும் கொடூர கொலைகளையும், ஓடி பிடிக்கும் காட்சிகளையும், திருப்பங்களோ, சுவாரஸ்யமோ இல்லாமல் கதை நகர்ந்திருப்பது படத்தின் பெரிய பலவீனம். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு ஓகே ரகம். பலவீனமான திரைக்கதைக்கு நவீன் சுந்தரின் பின்னணி இசையால் பலம் சேர்க்க முடியவில்லை.

பொதுவாக சைக்கோ த்ரில்லர் படங்களில் விஷ்ணு விஷாலின் 'ராட்சன்' உட்பட, கொலைகாரர்கள் எதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களாக காட்சிப்படுத்தப்படுகிறார்கள். நோய் பாதிப்புடன் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோக்களாகவும், கொடூர கொலைகளை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள் உண்மையில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற படங்களைப்பார்க்கும்போது அது அவர்களின் மனநிலைகளில் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மொத்ததில் பட்டாம்பூச்சி உயிர் இருந்தும் சிறகு இல்லாத காரணத்தால் பறக்க முடியாமல் தவிக்கிறது. படத்தின் தொடக்கத்தில், 'படத்தில் வரும் கொடூர கொலைக் காட்சிகள் பலவீனமானவர்களை மனரீதியாக பாதிக்கலாம்' என எச்சரிக்கை அறிவிப்பு வருகிறது. இதில் கொடூரக் கொலை என்ற வாசகத்தை தவிர்த்திருந்தால் பார்வையாளர்கள் தப்பித்திருக்கலாம்.

விமர்சனத்தை வீடியோ வடிவில் காண:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x