Published : 23 Jun 2022 12:46 AM
Last Updated : 23 Jun 2022 12:46 AM

நம்பி நாராயணன் தமிழர் என்பது பலருக்கு தெரியாது - 'ராக்கெட்ரி' விழாவில் மாதவன் உணர்ச்சிவசம்

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் ஜூலை 1 முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

படம் தொடர்பாக நடிகர் மாதவன் பத்திரிகையாளர்களையும் ஊடகத் துறையினரையும் சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விழாவில் மாதவன் பேசும்போது, " 'விக்ரம் வேதா' படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.

ஆரம்பத்தில், ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையாக இருக்கிறதே என்ற தோற்றத்தை எனக்குக் கொடுத்ததால், இந்த கதையை எடுக்க நான் உற்சாகமாக இருந்தேன். என் அனுமானங்களுடன், நான் நம்பி நாராயணனைச் சந்தித்தேன். அது என் வாழ்க்கையின் பரிமாணத்தையே மாற்றியது. சரியாகச் சொல்வதானால், நம்பி நாராயணனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த மாதவன், பின்பு இருந்த மாதவன் என என் வாழ்க்கையை நான் வகைப்படுத்துவேன். அவர் இந்தியாவின் அறிவார்ந்த மனிதர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும்.

அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, கிட்டத்தட்ட கொந்தளித்தார், நான் அவரை சமாதானபடுத்த விரும்பினேன். நான் சொன்னேன், “ஐயா, கடந்த காலங்கள் இருக்கட்டும். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்." என கூறினேன். ஆனால் அவர், "ஆம், நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் மற்றும் காவல்துறையால் நிரூபிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் நீங்கள் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் 'ஸ்பை' என குறியிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது, அது மீள முடியாததாகவே உள்ளது' என்றார். அது தான் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக ஏற்படுத்தியது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு, எனது திரைக்கதையோடு அவரைச் சந்திக்க நான் சென்றேன். அப்போது அவருடைய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலினால் நான் ஆச்சர்யமடைந்தேன். அவர் தனது சாதனைகளைப் பற்றி பேச ஆரம்பிதார், அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில், அவர் பேசும் போது நான் குறுக்கிட்டு, “சார், இது எல்லாம் உண்மையா?” என்று கேட்டேன். அவர், "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என கேட்டார். நான் அவரிடம் ஒரு ஏமாற்றத்துடன் கேட்டேன், "நான் ஏழு மாதங்கள் உங்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை எழுதினேன், ஆனால் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பற்றி நீங்கள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை."

அவர் அதற்கு ஒரு பதிலைக் கொடுத்தார், "நான் அசாதாரணமான எதையும் செய்யவில்லை. நான் வேலை செய்து சம்பளம் வாங்கினேன். “ என்று சாதாரணமாக கூறிவிட்டார். நாட்டில் தேசபக்தி உள்ளவர்களில் இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள். ஒருவர், தேசபக்தியை முழக்கமிட்டு, வெளிப்படுத்துகிறார், பரப்புகிறார், ஆனால் மற்றவர் - எழுதப்படாத மற்றும் யாராலும் அறியப்படாத சாதனை செய்த ஹீரோக்கள். நம்பி நாராயணன் போன்றவர்களின் காவிய வாழ்க்கையைப் பற்றி தேசமும் உலகமும் அறிய வேண்டும் என்று நான் விரும்பினேன்.

அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் ‘ராக்கெட்ரி’ தயாரிக்க முடிவு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x