

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி இளையராஜா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
சீனு ராமசாமி பேசுகையில், "இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. அதை இளையராஜா பார்த்துவிட்டார். ஆனால் இந்தப் படத்தின் பாடல் உருவாக்கம், ரீரெக்கார்டிங்கில் இரண்டுக்குமே கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. இதை முதலில் நான் கேட்கவும் இல்லை. பின்னர் இரண்டு மூன்று முறை கேட்டாலும், என்னை எதற்காக அழைக்கவில்லை என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.
படத்தின் ஒப்பந்தத்தின் போதே அவர்களுக்குப் பிடித்த கவிஞர்களுடன்தான் அவர்கள் வேலை செய்வார்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. நானும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன். என் படங்களில் தொடர்ந்து வைரமுத்துதான் பாடல்கள் எழுதியுள்ளார் உண்மை தான். யுவன்சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்துகூடத்தான் பாடல் எழுதியுள்ளார்கள். அதற்காக யுவனும் நீங்களும் மட்டும் சேர்ந்துகொள்ளலாம். நான் மட்டும் வரக்கூடாதா. நான் மட்டும் நிராகரிக்கப்படுவது ஏன். இது என்ன நியாயம்.
எனக்கு எவ்வளவு தவிப்பாக இருக்கும். கவிஞர் பா.விஜய்க்கு போன் செய்து பாடல் வரிகளை எனக்கு அனுப்புங்கள் என்றால், அவர் தயங்கித்தயங்கி பேசுகிறார். பின்னர் அமீர் தான் எனக்கு உதவினார். ஒருநாள் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றபோது தான் அங்குவந்த ஒருவர், 'நான் உங்கள் மாமனிதன் படத்தில் பாடல் எழுதியிருக்கேன்' என்றார். அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துவிட்டு பாடல் வரி அனுப்ப முடியுமா என்று கேட்டேன். அவர்தான எனக்கு வாட்ஸ் அப்பில் பாடல் வரிகளை அனுப்பிவைத்தார்.
நான் நிராகரிக்கப்பட்டது குறித்து பின்னால் தான் தெரிந்தது. கார்த்திக் ராஜா பெயரை போடாததால் தான் நான் நிராகரிக்கப்பட்டேன் என்று யுவன் அலுவலகத்தில் இருந்து சொல்லப்பட்டது. எனக்கு அது அதிர்ச்சி கொடுத்தது. இதெல்லாம் பார்க்கும்போது இந்தப் படத்தில் உள்ள நினைச்சது ஒன்னு, நடந்து ஒன்னு ஏன் ராசா பாடல் கடைசியில் எனக்குதானா ராசா என்றே எண்ணத் தோன்றியது.
இளையராஜா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அதனால் தான் அவரின் பண்ணைபுரத்தில் வைத்து படம் பிடித்தேன். இளையராஜா உடன் இணைந்து நிறைய படங்கள் வேலை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால், ஒரேயொரு கண்டிஷன், நீங்கள் கம்போஸ் செய்வதை உங்கள் அருகில் இருந்து நான் பார்க்க வேண்டும். எனவே உங்கள் மீது பேரன்பு கொண்டவர்களை காரணமின்றி நிராகரிக்காதீர்கள். நிராகரிப்பு மிகப்பெரிய மனவலியையும் வேதனையும் எனக்கு கொடுத்தது." இவ்வாறு இயக்குநர் சீனு ராமசாமி வேதனையுடன் பேசினார்.