Published : 17 Jun 2022 01:03 PM
Last Updated : 17 Jun 2022 01:03 PM

முதல் பார்வை | வீட்ல விசேஷம் - அசலை நெருங்க ‘முயன்ற’ கலகலப்பு சினிமா

காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? - இதுதான் 'வீட்ல விசேஷம்' படத்தின் ஒன்லைன்.

ரயில்வே டிடிஆராக இருக்கும் சத்யராஜ் - ஊர்வசி தம்பதியினருக்கு திருமண வயதில் ஒரு மகனும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களுடன் சத்யராஜின் அம்மா கேபிஏசி லலிதாவும் வாழ்கிறார். இந்நிலையில், திடீரென ஒருநாள் ஊர்வசி கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரியவர, தம்பதியினர் அதிர்ச்சியடைகின்றனர். இந்தச் செய்தியை தன் மகன்களிடமும், தன் அம்மாவிடமும் சத்யராஜ் எப்படி கொண்டு போய் சேர்க்கிறார், அதற்கு அவர்கள் ரியாக்‌ஷன்ஸ் என்ன? இதை பொதுச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதையெல்லாம் நகைச்சுவை கலந்து எமோஷனலாக சொல்லும் படம் தான் 'வீட்ல விசேஷம்'. கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பதாய் ஹோ' படத்தின் ரீமேக் தான் இந்தப் படம்.

பள்ளி ஆசிரியரான ஆர்.ஜே.பாலாஜிக்கு நகைச்சுவை காட்சிகள் நன்றாகவே பொருந்தி வருகின்றன. எமோஷனல் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிப்பில் வறட்சி தெரிகிறது. கூடுதல் எக்ஸ்பிரஷன்ஸ்களின் தேவையை காட்சிகள் உறுதி செய்கின்றன. அதேசமயம் சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டும் அபர்ணா பாலமுரளியின் நடிப்பும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அப்பாவி தந்தையாகவும், அம்மா - மனைவியுடன் சிக்கித்தவிக்கும் ஆணாகவும், குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்து ஸ்கோர் செய்கிறார் சத்யராஜ். மனைவியின் கர்ப்பத்தை சொல்லும் காட்சிகளில் ஈர்க்கிறார்.

ஊர்வசி நடிப்பில் மிரட்டுகிறார். தாய்மையை புனிதப்படுத்தும் காட்சிகளில், 'ஆம்பள தடியா' என மிரட்டிப் பேசுவது, சங்கடமான சூழல்களை எதிர்கொள்வது, கர்ப்பத்தால் உண்டான ஒருவித சோர்வை முகத்தில் சுமந்திரிப்பது என நடிப்பில் உச்சம் தொடுகிறார். க்ளைமாக்ஸ் காட்சி முழுவதுமே ஊர்வசிதான் ஆக்கிரமித்திருக்கிறார்.

படம் சொல்ல முயலும் கருத்து முக்கியமானது. ''ஒரு பொண்ணு 25 வயசுக்கு முன்னாடி குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தப்பா பேசுவார்கள்; 50 வயதுக்கு பின்னால் குழந்தை பெற்றுக்கொண்டாலும் தவறாக பேசுவார்கள்'', ''50 வயசுல மனைவிய கர்ப்பமாக்கின ஆண்களை ஆம்பள சிங்கம் என்றும், பெண்களை உனக்கு அறிவில்லையா, குடும்ப கௌரவம் என்னாவது'' - இப்படித்தான் இந்தப் பொதுசமூகம் பேசும் என்ற ஊர்வசியின் வசனங்கள் தெறிக்கவிடுகின்றன. படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதி எமோஷனலுடனும் நகர்த்தியிருக்கிறார்கள். பெரும்பாலான காமெடிக் காட்சிகள் பொதுப் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கின்றன.

ஆனால், எமோஷனல் காட்சிகளில் அசலின் உயிர்ப்பை வார்த்தெடுக்க முடியவில்லை. உதாரணமாக 'பதாய் ஹோ' படத்தில் சத்யராஜின் தாய் கதாபாத்திரத்தின் நிறம் மாறும்போது அவர் பேசும் வசனம் நம்மை கலங்க வைக்கும். ஆனால், அதன் ரீமேக்கான இந்தப் படத்தில் அந்த காட்சிகள் ஒரு சிரீயலைப் பார்ப்பது போன்ற உணர்வை கடத்துவதை தவிர்க்க முடியவில்லை. அடிப்படையில் இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்வது பொருத்தமானதில்லை என்றாலும், வசனம் முதற்கொண்டு அப்படியே ரீமேக் செய்திருக்கும் வேளையில் தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றார்போல வசனங்களையும், காட்சிகளையும் மாற்றியிருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். இந்த பிரச்சினை 'பதாய் ஹோ' படத்தைப்பார்த்துவிட்டு அதே மைண்ட் செட்டில் திரையரங்குகளுக்குள் நுழைபவர்களுக்குத்தான். அந்தப் படத்தை பார்க்காமல், புதிதாக 'வீட்ல விசேஷம்' படத்தை பார்ப்பவர்களுக்கு மேற்கண்ட துறுத்தல்கள் பெரிய அளவில் இருக்கும் வாய்ப்பு குறைவு.

தவிர, படம் போகிற போக்கில் விஷத்தை நகைச்சுவை பாணியில் விதைக்க முயற்சிப்பது ஆபத்தானது. குறிப்பாக, ஊர்வசி குழந்தையை பெற்றெடுக்கும் காட்சியில், மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்துகொண்டிருக்கும்போது, கடவுளே என ஒரிடத்தில் சொல்வார். அப்போது அருகிலிருக்கும் நர்ஸ் ஒருவர், 'அப்படித்தான் மேடம், 'ஏசப்பா'ன்னு சொல்லுங்க சீக்கிரம் நல்லபடியாக குழந்தை பொறக்கும். 'ஏசப்பா' சொல்லுங்க' என கூறும்போது, அவருக்கு எதிர்புறமாக நின்றிருக்கும் சத்யராஜ், 'முருகன் சொல்லு முருகா முருகா' என கூறும் வகையில் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 'பதாய் ஹோ' படத்தில் இல்லாத எக்ஸ்ட்ரா பிட்டிங் காட்சி இது. ஆபத்தான காட்சியும் கூட. தேவையில்லாத இந்த ஆணியை சேர்த்திருப்பது ஏன் என தெரியவில்லை. அதை பார்வையாளர்கள் எப்படி உள்வாங்குவார்கள் என்பதை இயக்குநர்கள் உணர்வதில்லை.

மருத்துவமனையில் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், இதுபோன்ற மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகள் தேவைதானா ஆர்ஜே பாலாஜி? அதுவும், அந்தச் சூழலிலும் கூட கிறிஸ்துவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவார்கள் என்ற நுண்ணரசியலை பேசும் தேவையற்ற காட்சிகள் முகச்சுளிப்பையே ஏற்படுத்துகின்றன.

கார்த்திக் முத்துகுமாரன் ஒளிப்பதிவில் கதைக்கு தேவையானதை செய்து கொடுத்திருக்கிறார். க்ரீஷ் கோபாலாகிருஷ்ணனின் இசையில் க்ளைமாக்ஸ் பாடல் எமோஷனல் கனெக்ட் கொடுத்தாலும், முக்கியமான சில இடங்களில் அவரது பின்னணி இசை சிரீயலுக்கான உணர்வை கடத்துவது உறுத்தல். பின்னணி இசையில், இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம் என தோன்றுகிறது.

மொத்ததில் அசல் படைப்பை பார்க்காதவர்களுக்கு இப்படம் புதிய அனுபவத்தையும், அசல் படைப்பை பார்ப்பவர்களுக்கு பாதி திருப்தியையும் ஏற்படுத்தும். எப்படியிருந்தாலும், இப்படத்தைப் பார்ப்பவர்கள் 'பதாய் ஹோ' என்ற அசல் படைப்பை பார்த்தால் இரண்டின் மேக்கிங்கையும் புரிந்து கொள்ளமுடியும்.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண ;

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x