

விஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' திரைப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் 'மாமனிதன்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
'மாமனிதன்' படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப்படம், கரோனா அச்சுறுத்தல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீசாகாமல் இருந்து வந்தது. இதையடுத்து 4 முறை தள்ளிப்போன இந்தப் படத்தின் வெளியீட்டால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது படம் ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.