Published : 08 Jun 2022 02:06 PM
Last Updated : 08 Jun 2022 02:06 PM

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின்போது எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: திரைப்படங்களில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் தொடர்பான காட்சிகள் வரும்போது விழிப்புணர்வு வாசகங்கள் வருவதைப் போன்று சண்டை காட்சிகளின்போதும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். எந்தவித தயக்கமுமின்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படையாக சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள் அமைந்துள்ளன. திரையரங்கை நோக்கி ரசிகர்களை வர வைப்பதற்காக நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த வன்முறை காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மைத் தன்மையை பகுத்தறிய முடியாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது "இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டது", "சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல வெறும் கலர் பவுடர் தான்" போன்ற வாசகங்களை இடம்பெற உத்தரவிட வேண்டும்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் தொடர்பான காட்சிகள் வரும்போது விழிப்புணர்வு வாசகங்களை போன்று சண்டை காட்சிகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், திரைப்படக் காட்சிகளை பார்த்துதான் பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தக பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வருவதாக தெரிவித்தார்.

அப்போது, இதற்கு என்ன ஆதாரம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள மனுதாரர் அனுமதி கோரினார். இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x