Published : 16 Jun 2014 05:14 PM
Last Updated : 16 Jun 2014 05:14 PM

மொபைல் சார்ஜ் பண்ண சுள்ளிகள் போதும்!

ஒரு விடுமுறை தினத்தை நண்பர்களுடன் கழிக்க வேண்டிய சூழல். நண்பர்களுடன் அடர்ந்த காட்டுக்குள் போகிறீர்கள். கையில் எப்போதும் போல் மொபைலுடன்தான் செல்கிறீர்கள். அவ்வப்போது வனத்தின் அழகான காட்சிகளைப் படம் பிடித்து பேஸ்புக்கில் அப்டேட் செய்கிறீர்கள். அந்த அடர்ந்த வனத்தில் மின் இணைப்பு கிடையாது. அனைவரது மொபைல்களிலும் பேட்டரி சார்ஜ் குறைந்துகொண்டே வருகிறது. எல்லோரையும் பதற்றம் பற்றுகிறது. வனத்தில் ஏராளமான மரங்களின் சுள்ளிகள் பரவிக் கிடக்கின்றன. இந்தச் சுள்ளிகளை எரித்து அந்த வெப்பத்தில் மொபைலை சார்ஜ் செய்ய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றும்தானே. அந்தக் கற்பனையே களிப்பைத் தருகிறதே, அது நிஜமானால்?

வியப்பில் வாய் பிளக்காதீர். வெறும் சுள்ளிகளால் நெருப்பை மூட்டி அதன் மூலம் மொபைலை சார்ஜ் ஏற்றவும் தேநீர் தயாரிக்கவும் உதவும் வகையில் பயோலைட் கேம்ப்ஸ்டவ் ஒன்று தற்போது கிடைக்கிறது. இந்த ஸ்டவ்வில் இரண்டு அறைகள் உள்ளன. ஓர் அறையில் சுள்ளிகளைப் போட்டு எரிக்கலாம்; அந்த அறையின் மீது பாத்திரத்தை வைத்துச் சூடேற்றலாம். ஒரு லிட்டர் தண்ணீரை நான்கைந்து நிமிடங்களில் கொதிக்க வைக்கலாம். ஆகவே தேவையான தேநீரைத் தயாரித்துக்கொள்ளலாம். அடுத்த அறையில் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மொபைலுக்கு சார்ஜ் ஏற்றப் பயன்படுத்த வாகாக பிளக் பாயிண்ட் தரப்பட்டுள்ளது. 5 வோல்ட் மின்சாரத்தை இது உற்பத்தி செய்யும். மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொள்ள இது போதும். இதன் விலை சுமார் 130 அமெரிக்க டாலர்.

இந்த ஸ்டவ்வை மிக எளிதாக எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த இயலும். பயன்படுத்தி முடித்த பின்னர், சுள்ளிகளால் ஏற்பட்ட சாம்பலை சிறிய குழி தோண்டி கொட்டி தண்ணீர் ஊற்றித் தணலை அணைத்துவிட்டால் போதும், வேலை முடிந்துவிடும். மண்ணோடு மண்ணாக மட்கிவிடும், சுற்றுச் சூழலுக்கு எந்தக் கேடும் விளைவிக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x