Last Updated : 23 May, 2016 03:11 PM

 

Published : 23 May 2016 03:11 PM
Last Updated : 23 May 2016 03:11 PM

டவுன்ஃபால்: உலகை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியின் வீழ்ச்சி

உலகையே உண்டு இல்லை என்று ஆக்கிய சர்வாதிகாரி ஹிட்லர் கடைசியில் தற்கொலை செய்துகொண்டுதான் இறந்தார் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். அப்படி அவர் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த சூழலை மிகவும் பதற்றத்தோடு விவரிக்கிறது 'Downfall' எனும் ஜெர்மன் திரைப்படம்.

ஹிட்லருக்கு செகரட்டரியாக பணியாற்றிய ட்ரவுடில் ஜங்கே என்ற இளம்பெண்ணின் டைரிக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இளம்பெண் 'ட்ரவுடில் ஜங்கே' செகரட்டரி பதவிக்காக பலரும் பங்கேற்ற நேர்காணலில் தேர்வாவதிலிருந்தே படம் தொடங்குகிறது.

ட்ரவுடில் அளித்த பதில்களும் பிழையின்றி தட்டச்சு செய்ததும் ஹிட்லருக்கு பிடித்துப் போகிறது. ஆனால் அந்த காலகட்டம்தான் எவ்வளவு பதட்டமானவை.. உலகம் எவ்வளவு பெரிய இழப்புகளை சந்தித்தது என்பதெல்லாம் ட்ரவுடிலுக்குத் தெரியாது. அவளைப் பொறுத்தவரையில் ஹிட்லர் அவளது எஜமானர். அவர் இட்ட பணிகளை செவ்வனே முடித்துத் தரவேண்டியது அவளுடைய பொறுப்பு.

ஹிட்லரைப் பற்றிய இப்படம் எப்படியிருக்குமோ என பயந்துகொண்டே பார்க்கத் தொடங்கினால் பெரும் போர்க்களக் காட்சிகள் எதுவுமில்லை. முற்றிலுமாக வேறு தன்மையில் இருப்பதை உணரமுடிந்தது. சிற்சில பீரங்கி வெடிக்கும் காட்சிகளில் பெர்லின் மக்கள் இறந்துவிழுகிறார்கள். சிலர் பதறியோடுகிறார்கள்.

அதைத் தொடர்ந்து தப்பியோடும் ஹிட்லர் தன் ஜாகையையே பூமிக்கடியில் நிலவறைக்கு மாற்றிக்கொள்கிறார். அங்கிருந்து அரசாங்கம் நடத்துகிறார். படைகள் எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதையெல்லாம் வரைபடத்தை வைத்தும் தொலைபேசி வாயிலாகவும் அறிந்து உடனுக்குடன் தன் முடிவுகளை அறிவிக்கிறார்.

இதற்குப் பின்னணியாக பீரங்கிவெடிச் சத்தங்கள் அவ்வப்போது கேட்டவண்ணம் உள்ளன அவ்வளவுதான். அதற்காக பிரமாண்டம் இல்லை என்று முடிவுசெய்துவிடக்கூடாது. வண்ணத்தை அதிகம் குழைக்காத கோட்டோவியம்போல திகழும் இப்படம் அந்த மாபெரும் வீழ்ச்சியை காட்டத் தவறிவில்லை.

இப்படத்தில் ஹிட்லர் இறுதிகாலகட்ட பல்வேறு அவலச்சுவைகளும் மிகுந்துள்ளன. கடைசியாக பெர்லினில் இவர்கள் இருக்கும் பகுதியை செம்படை நெருங்கிவிடுகிறது. ஹிட்லர் தன் மனைவியோடு தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறார். தன் பிணம்கூட எதிரிகளுக்கு கிடைத்துவிடக் கூடாதென கேட்டுக்கொள்கிறார். முதலில் மனைவி மாத்திரைகள் விழுங்கி இறக்க, ஹிட்லர் துப்பாக்கி எடுத்து நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்ததுவிட உடனடியாக அவர்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படுகின்றனர்.

சமயத்தில் ஆவேசப்பட்டாலும் தனிப்பட்ட பண்புநலன்கள் மிக்க ஹிட்லரை Bruno Ganz நடிப்பில் நாம் பார்க்கக் கிடைத்தது உன்னத அனுபவமே. எல்லாவற்றையும் விட ஹிட்லரின் செகரட்டரியாக வரும் இளம்பெண் ஒரு ஜெர்மனியரான Alexandra Maria Lara வின் சிறந்த நடிப்புதான் வரலாற்றை நெருங்கிப் பார்க்க நமக்கு உதவுகிறது.

சொந்தவிருப்பு, தேசப்பற்று போன்றவற்றில் பலவீனமாக விழுந்துவிடாமல் சரித்திரத்தை நேர்மையாக அணுகியிருக்கிறார் இயக்குநர் Oliver Hirschbiegel.

முழுப்படத்தையும் பதற்றத்தோடும் கடும் பரவசத்தோடும் பார்த்துமுடிக்கும்போது, இறுதியில் உண்மையான ட்ரவுடில் ஜங்கே தன் இன்றைய வயதான நிலையில் தோன்றுகிறார், ''அவர் என்னை மிகவும் கவுரவமாக நடத்தினார். ஆனால் பின்னர்தான் உலகத்திற்கு அவர்செய்த கொடுமைகளை என்னால் அனுமானிக்க முடிந்தது. அவர் இளமையில் என்னைப் பாராட்டியதை இப்போது நினைத்தால் கூட குற்ற உணர்ச்சியும் வெட்கமும் ஏற்படுகிறது'' என பேசிச் செல்கிறார்.

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ள, சரித்திரத்தை கூர்ந்து கவனிப்பவர்கள் பார்த்திருக்க வேண்டிய அல்லது இனிமேலாவது நிச்சயம் பார்க்கவேண்டிய படம் 'டவுன்ஃபால்'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x