

நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'டான்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் கடந்த மே-13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டான் வெளியாகி 12 நாட்களே ஆன நிலையில் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனுக்கு இது இரண்டாவது ரூ.100 கோடி க்ளப் படம். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'டாக்டர்' தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.