

கமல் நடிப்பில் வெளியாக உள்ள 'விக்ரம்' படத்தையொட்டி, ரசிகர்களை சர்ப்ரைசாக கமல்ஹாசன் சந்திக்கும் வீடியோ அதிகாரபூர்வமாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபஹத் பாசில் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படம் வருகின்ற ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 4 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசனை திரையில் காணப்போகிறோம் என்ற உற்சாகத்தில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில், 'சோனி மியூசிக் சவுத்' சார்பில் வீடியோ ஒன்று வெளியிடபட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் சிலர், 'அவரை ஏன் பிடிக்கும்?' என்பது குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அப்போது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், திடீரென அவர்களுக்கு பின்னால் வந்து நின்று சர்ப்ரைஸ் கொடுக்கிறார் கமல். அவரைப் பார்த்தும் ஒரு நிமிடம் மெய் மறந்த ரசிகர்கள் திக்குமுக்காடி விடுகின்றனர்.
கமலை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர் ஒருவர், 'நம்பவே முடியல சார்.. இருங்க கிள்ளி பாத்துக்குறேன்' என ஆச்சரியப்படுகிறார். மற்றொருவர், சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீருடன் கமலை கட்டியணைக்கிறார். மற்றொரு ரசிகர் கமல் காலில் விழுகிறார்.
இப்படியாக 2.30 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பு மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் இதேபோல ரசிகர்களை சர்பரைசஸாக சந்தித்த வீடியோ அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது.