“தேசிய மொழியான இந்தியை மதிக்க வேண்டும்” - நடிகர் அர்ஜுன் ராம்பால் கருத்து; ‘பாடம்’ புகட்டும் நெட்டிசன்கள்

நடிகர் அர்ஜுன் ராம்பால். 
நடிகர் அர்ஜுன் ராம்பால். 
Updated on
1 min read

மும்பை: "நமது நாட்டின் தேசிய மொழி இந்தி என கருதுகிறேன். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" என தேசிய மொழி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால். அவருக்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளால் பாடம் எடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் தேசிய மொழி குறித்து நடிகர்கள் அஜய் தேவ்கனுக்கும், கிச்சா சுதீப்புக்கும் இடையே கடந்த மாதம் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. "இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி" என சொல்லியிருந்தார் அஜய் தேவ்கன். அதை திட்டவட்டமாக மறுத்திருந்தார் சுதீப். தொடர்ந்து அது அரசியல் ரீதியாகவும் கவனம் ஈர்த்தது. நடிகை கங்கனா ரனாவத் உட்பட பல பிரபலங்கள் அதுகுறித்து தங்களது கருத்தை சொல்லி இருந்தனர். அந்த வரிசையில் இப்போது புதிதாக இணைந்துள்ளார் அர்ஜுன் ராம்பால்.

"வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. பல மொழிகள், கலாசாரங்கள், பண்டிகைகள், மதங்கள் என வண்ணமயமான நாடு இந்தியா. நாம் அனைவரும் இங்கு நிம்மதியுடனும், மகிழ்வுடனும் வாழ்ந்து வருகிறோம். நான் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

இந்தி நமது தேசிய மொழி என நான் கருதுகிறேன். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் இந்தி மொழி அதிகம் பேசப்பட்டும், புரிந்து கொள்ளப்பட்டும் வருகிறது. ஆனால், வேறு எந்த மொழியையும் அது கொண்டு போகவில்லை" என தெரிவித்துள்ளார்.

இவர் நடித்துள்ள Dhaakad திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இதில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வினை ஆற்றிய நெட்டிசன்கள்: அர்ஜுன் ராம்பால் கருத்தை கவனித்த நெட்டிசன்கள், அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். "இந்தி நமது தேசிய மொழி அல்ல. மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா. அதற்கு தேசிய மொழி கிடையாது", "பாலிவுட் தோழர்கள் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்", "உலகில் எங்குமே இந்தி தேசிய மொழியாக இல்லை. அப்போது அர்ஜுன் ராம்பால் எந்த தேசத்தை சேர்ந்தவர்?", "லைம் லைட்டுக்குள் வர இப்படி கருத்து சொல்லியுள்ளார். அவ்வளவு தான்", "இந்தி நமது தேசிய மொழி என சொல்பவர்களை ஆறாம் வகுப்புக்கு அனுப்ப வேண்டும்" என கருத்து தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in