

பிரான்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழா மகத்தான வெற்றிபெற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரத்திற்குரிய நாடாக இந்தியா பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவும் கேன்ஸ் திரைப்பட விழாவின் 75 வது ஆண்டு விழாவும் இந்தியா –பிரான்ஸ் இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆவது ஆண்டும் ஒருங்கிணையும் தருணத்தில் இந்தியாவின் பங்கேற்பு அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "உலகில் மிக அதிக எண்ணிக்கையில் திரைப்படங்களை தயாரிக்கும் நாடு என்ற நிலையில் உள்ள இந்தியா, திரைப்பட துறையில் குறிப்பிடத்தக்க விசித்திரங்களை கொண்டுள்ளது. வளமான பாரம்பரியமும், பன்முக கலாச்சாரமும் நமது பலம்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, திரைப்படத்துறையில் வணிகத்தை எளிதாக்க இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர் மோடி சர்வதேச ரீதியில் கூட்டு தயாரிப்பை ஒற்றை சாளர முறையில் உறுதி செய்திருப்பதை சுட்டிக்காட்டினார். உலகின் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தடையில்லா வாய்ப்புகளை இந்தியா வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார். சத்தியஜித் ரேயின் நூற்றாண்டை இந்தியா கொண்டாடும் நிலையில், அவரது திரைப்படம் கேன்ஸ் விழாவில் தொன்மையான திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்படுவதற்கும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரான்ஸில் கேன்ஸ் விழா தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரைபிரபலங்கள் ஏஆர் ரஹ்மான், நவாஸுதீன் சித்திக், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளனர். இதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து இயக்குநர் பா ரஞ்சித், தமன்னா, நயன்தாரா போன்றோரும் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.